




“வாழ்க்கைக்காய் தத்தெடுக்கப்பட்டது” என்னும் புத்தகத்தில், டாக்டர். ரஸ்ஸல் மூர் ஒரு குழந்தையைத் தத்தெடுப்பதற்காக அனாதை இல்லத்திற்கு தனது குடும்பத்தினர் மேற்கொண்ட பயணத்தை விவரிக்கிறார். அவர்கள் அந்த இல்லத்திற்குள் நுழையும் போது, அங்கு நிலவிய அமைதியான சூழல் அவர்களை திடுக்கிட வைத்தது. தொட்டிலில் இருந்த குழந்தைகள் அழவில்லை. அவைகளுக்கு எதுவும் தேவையில்லை என்பதினால் அல்ல; மாறாக, அழுதாலும் யாரும் அவர்கள் மீது அக்கறை காட்டமாட்டார்கள் என்பதை அவைகள் நன்று அனுபவித்திருந்தன என்பதினால் அமைதி காத்தனர்.
அந்த வார்த்தைகளை வாசிக்கையில் என் மனம் வலித்தது. எங்கள் குழந்தைகள் சிறியவர்களாக இருந்த எண்ணற்ற இரவுகள் எனக்கு நினைவிருக்கிறது. “அப்பா, எனக்கு உடம்பு சரியில்லை!” அல்லது “அம்மா, எனக்கு பயமாயிருக்கிறது!” என்று சொன்னமாத்திரத்தில் எங்களில் ஒருவர் செயலில் இறங்கி, அவர்களை ஆறுதல்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய அவர்களின் படுக்கையறைக்குச் சென்றது நினைவிருக்கிறது. எங்கள் குழந்தைகள் மீது எங்களுக்குள்ள அன்பு, அவர்களுடைய தேவையில் அவர்கள் எங்களை அழைப்பதற்கான காரணத்தை கொடுத்தது.
பெரும்பாலான சங்கீதங்கள் தேவனிடத்தில் ஏறெடுக்கப்பட்ட அழுகைகளையும் புலம்பல்களையும் உள்ளடக்கியுள்ளது. அவர்களுடனான தனிப்பட்ட உறவின் அடிப்படையில் இஸ்ரவேல் தங்கள் புலம்பல்களை தேவனிடத்தில் கொண்டுவந்தது. தேவன் தன்னுடைய “சேஷ்டபுத்திரன்” (யாத்திராகமம் 4:22) என்னும் அங்கீகாரத்தைக் கொடுத்தார். அவர்களும் தங்களுடைய தேவைகளை தகப்பனிடத்தில் கொண்டுவந்தனர். இத்தகைய நேர்மையான நம்பிக்கை சங்கீதம் 25-ல் காணப்படுகிறது: “என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்... என் இடுக்கண்களுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்.” பராமரிப்பாளரின் அன்பில் நம்பிக்கை கொண்ட குழந்தைகள் மட்டுமே அழுகிறார்கள். இயேசுவின் விசுவாசிகளாக, தேவனின் பிள்ளைகளாக அவரை நோக்கிக் கூப்பிடுவதற்கான காரணத்தை அவர் நமக்குத் தந்திருக்கிறார். அவர் நம்மை அதிகமாய் நேசிக்கிறபடியால் நம்முடைய ஜெபங்களைக் கேட்கிறார், நம்மை பாதுகாக்கிறார்.
- ஜாண் பிளேஸ்
ஒரு கோடை இரவு, எங்கள் வீட்டிற்கு அருகில் இருந்த பறவைகள் திடீரென்று குழப்பமான ஓசை எழுப்பின. பாட்டுப்பறவைகள் மரங்களில் இருந்து அலறல் ஓசைகளை எழுப்பியது. ஏன் என்பதை தாமதமாகதான் உணர்ந்தோம். சூரியன் மறையும் போது, ஒரு பெரிய பருந்து ஒரு மரத்தின் உச்சியில் இருந்து பாய்ந்து வந்தது. மரத்திலிருந்து பறவைகள் ஆவேசத்துடன் சிதறி, அபாயத்திலிருந்து பறந்து செல்லும் போது எச்சரிக்கை ஒலி எழுப்பியது.
வேதாகமம் முழுவதும் நம் வாழ்க்கைக்கு தேவையான எச்சரிக்கைகளை விடுக்கிறது. உதாரணமாக, தவறான போதனைகளுக்கு விரோதமான எச்சரிக்கைகளை எடுத்துக்கொள்ளலாம். நாம் கேட்பதை நாம் சந்தேகிக்கக்கூடும். எவ்வாறாயினும், நம் பரலோகத் தகப்பன் நம்மீது அவருக்குள்ள அன்பின் நிமித்தம், அத்தகைய ஆவிக்குரிய ஆபத்துகளை நமக்குத் தெளிவாக்குவதற்கு வேதத்தின் தெளிவைத் தருகிறார்.
இயேசு, “கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்” (மத்தேயு 7:15) என்று எச்சரிக்கிறார். மேலும், “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்... அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும். ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்” (வச. 16-17; 20) என்றும் எச்சரிக்கிறார்.
“விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்” (நீதிமொழிகள் 22:3) என்று நமக்கு நினைவுபடுத்துகிறது. இதுபோன்ற வார்த்தைகளில் தேவனுடைய பாதுகாக்கும் அன்பு மறைந்திருந்து நமக்கு அவ்வப்போது வார்த்தையின் மூலம் வெளிப்படுகிறது.
தங்களுக்கு மாம்ச ரீதியாக ஏற்படப்போகிற ஆபத்தைக் குறித்து பறவைகள் ஒன்றையொன்று எச்சரித்ததுபோல, ஆவிக்குரிய ஆபத்துகளிலிருந்து நம்மை எச்சரிக்கும் வேதத்தின் சத்தியங்களுக்கு நாம் செவிகொடுப்போமாக.
- பாட்ரிசியா ரேபோன்
சார்லி மற்றும் ஜானின் ஐம்பதாவது திருமண ஆண்டு விழாவில், அவர்கள் தங்கள் மகன் ஜானுடன் ஒரு ஓட்டலில் காலை உணவை சாப்பிட்டனர். அன்று உணவகத்தில் ஒரு மேலாளர், சமையல்காரர் மற்றும் ஒரு இளம் தொகுப்பாளினி, பணிப்பெண் மற்றும் பணம் சேகரிக்கும் ஒருவர் என்று வெகு குறைவான பணியாளர்கள் மட்டுமே இருந்தனர். அவர்கள் காலை உணவை முடித்ததும், சார்லி தனது மனைவி மற்றும் மகனின் பக்கம் திரும்பி, “அடுத்த சில மணிநேரங்களில் உங்களுக்கு வேறு ஏதாவது முக்கியமான வேலை இருக்கிறதா?” என்று கேட்க, அவர்கள் இல்லை என்று பதிலளித்தனர்.
எனவே மேலாளரின் அனுமதியுடன், சார்லியும் ஜானும் உணவகத்தின் பின்புறத்தில் பாத்திரங்களைக் கழுவத் தொடங்கினர். ஜான், உணவுகள் சிதறிக்கிடந்த மேசைகளைத் துடைக்கத் தொடங்கினார். ஜானின் கூற்றுப்படி, அன்று நடந்தது உண்மையில் ஆச்சரியப்படும் காரியம் இல்லை. அவனுடைய பெற்றோர், இயேசு “ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்ய” வந்தார் (மாற்கு 10:45) என்பதை அவனுக்குக் கற்றுக்கொடுத்தே வளர்த்திருக்கிறார்கள்.
யோவான் 13ல், கிறிஸ்து தம் சீஷர்களுடன் கடைசியாகப் பகிர்ந்துகொண்ட உணவைப் பற்றி வாசிக்கிறோம். அன்றிரவு, அவர்களின் அழுக்கு கால்களைக் கழுவுவதன் மூலம் தாழ்மையின் ஊழியத்தைக் குறித்து இயேசு அவர்களுக்குக் கற்பித்தார் (வச. 14-15). பன்னிரண்டு பேர்களின் கால்களைக் கழுவும் கீழ்த்தரமான வேலையைச் செய்ய அவர் தயாராக இருந்தால், அவர்களும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியுடன் ஊழியம் செய்திருக்கக்கூடும்.
நாம் செய்ய வேண்டிய ஊழியங்களின் தன்மை வித்தியாசப்படலாம், ஆனால் அது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்பதை மறுக்கமுடியாது. ஒருவர் புகழைப்பெறுவதற்காய் இந்த சேவைப் பணியில் ஈடுபடுவதில்லை, மாறாக, மற்றவர்களுக்கு சேவை செய்வதின் மூலம் நம்முடைய தாழ்மையான, தியாக உருவான தேவனுக்கு மகிமையைச் செலுத்துகின்றனர்.
- சிண்டி ஹெஸ் காஸ்பர்