காலையில் ரயிலில் கூட்டம் அலைமோதுவதைப் பார்த்து, திங்கட்கிழமை பரபரப்பை உணர்ந்தேன். நெரிசல் நிறைந்த கேபினில் இருந்தவர்களின் தூக்கம், எரிச்சலான முகம் ஆகியவற்றைப் பார்க்கும்போது அவர்கள் வேலைக்கு செல்லும் சரியான மனநிலையில் இல்லை என்பதை என்னால் சொல்லமுடியும். சிலர் உட்காரும் இருக்கையை பிடிக்க முண்டியடித்து முன்னேற, மேலும் பலர் உள்ளே நுழைய முற்பட்டதால் முகச் சுளிவுகள் வெடித்தன. இதோ வழக்கம்போல அலுவலகத்திற்கு செல்லும் ஒரு சாதாரண நாளாக இதுவும் நகர்ந்து செல்லுகிறது. 

திடீரென்று எனக்கு ஒன்று நினைவுக்கு வந்தது. சரியாய் ஒரு வருடத்திற்கு முன்பு, கோவிட்-19 தொற்று பரவிய நாட்களில் நம்முடைய அன்றாட வழக்கத்தை செயல்படுத்த முடியாமல் வீடுகளில் முடங்கிக் கிடந்தோம். உணவு உண்பதற்கு வெளியே செல்லமுடியாத நிலை. சிலர் அலுவலகங்களுக்கும் செல்லமுடியவில்லை. ஆனால் தற்போது நாம் இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறோம். வழக்கம்போல செய்யும் இயல்பு காரியங்கள் சலிப்பு தட்டகூடியதாய் இருந்தாலும் அது ஆசீர்வாதம் என்னும் நற்செய்தியை நான் உணர்ந்தேன். 

சாலொமோன் ராஜா, நாம் அன்றாடம் ஏறெடுக்கும் பிரயாசங்களில் இருக்கும் அர்த்தமற்ற காரியங்களைக் குறித்து பேசுகிறார் (பிரசங்கி 2:17-23). சிலவேளைகளில் அது முடிவில்லாததாகவும், அர்த்தமற்றதாகவும் பிரயோஜனமற்றதாகவும் தெரியலாம் (வச. 21). ஆனாலும் புசித்து குடித்து ஒவ்வொரு நாளும் திருப்தியாய் இருப்பது தேவனிடத்திலிருந்து கிடைத்த நன்மை என்பதை அவர் வலியுறுத்துகிறார் (வச. 24). 

நாம் வழக்கமாய் செய்யும் காரியங்களினால் சலிப்படையும்போது, இந்த காரியங்கள் அனைத்தும் மேன்மையானது என்பதை அறிவோம். நாம் புசித்து, குடித்து, கையிட்டு செய்யும் பிரயாசங்களில் திருப்தியடைவது என்பது தேவன் நமக்கருளிய ஈவு என்று எண்ணி தேவனுக்கு நன்றி செலுத்துவோம் (3:13).