Archives: மே 2023

துக்கமும் மகிழ்ச்சியும்

ஏஞ்சலாவின் குடும்பம் நான்கு வாரங்களில் மூன்று பேரை இழந்ததால் சோகத்தில் தள்ளாடியது. அவரது மருமகனின் திடீர் மரணத்திற்குப் பிறகு, ஏஞ்சலாவும் அவரது இரண்டு சகோதரிகளும் மூன்று நாளாக உணவு மேசையை சுற்றி அமர்ந்துகொண்டு துக்கம் அனுசரித்தனர். மேசனின் இழப்பைக் குறித்து அவர்கள் அழுது கொண்டிருந்தபோது, அவர்களது இளைய சகோதரிக்குள் வளர்ந்து வரும் புதிய கருவின் அசைவுகளைக் காண்பிக்கும் அல்ட்ராசவுண்ட் புகைப்படங்களைப் பார்த்து அவர்கள் மகிழ்ச்சியும் அடைந்தனர். 

அவ்வப்போது ஏஞ்சலா பழைய ஏற்பாட்டின் எஸ்றா புத்தகத்தைப் பார்த்து தேறுதல் அடைந்துகொள்வாள். பாபிலோனியர் எருசலேம் ஆலயத்தை தரைமட்டமாக்கி, அவர்களை சிறைபிடித்த பின்னர், தேவ ஜனம் எருசலேமுக்கு திரும்புவதைக் குறித்த தகவலை அது பதிவுசெய்துள்ளது (எஸ்றா 1). ஆலயம் மறுபடியும் எடுப்பித்து கட்டப்படுவதை எஸ்றா பார்த்த பிறகு, தேவனுக்கு துதி ஏறெடுக்கும் சத்தத்தை அவர் கேட்கிறார் (3:10-11). ஆனால் சிறையிருப்பிற்கு முன்னர் மக்களின் துக்கமான அழுகுரல்களையும் அவர் கேட்டிருக்கிறார் (வச. 12). 

ஏஞ்சலாவுக்கு ஒரு வசனம் மிகவும் பிடித்திருந்தது: “ஜனங்கள் மகா கெம்பீரமாய் ஆர்ப்பரிக்கிறதினால் அவர்கள் சத்தம் வெகுதூரம் கேட்கப்பட்டது; ஆனாலும் சந்தோஷ ஆரவாரத்தின் சத்தம் இன்னதென்றும், ஜனங்களுடைய அழுகையின் சத்தம் இன்னதென்றும் பகுத்தறியக்கூடாதிருந்தது” (வச. 13). அவள் ஆழ்ந்த துக்கத்தில் இருந்தாலும், அங்கிருந்தும் மகிழ்ச்சியை அனுபவிக்கக்கூடும் என்பதை அறிந்துகொண்டாள். 

நாமும் நமக்கு நெருங்கியவர்களுடைய இழப்பைக் குறித்து துக்கங்கொண்டாடலாம். அப்படியென்றால், அவர் நம்மை அவருடைய புயங்களுக்கு நடுவில் அணைத்து சேர்த்துக்கொள்வார் என்று நம்பி நம்முடைய துக்கங்களை மகிழ்ச்சியோடு கூடிய தருணங்களோடு அவரிடத்தில் வெளிப்படுத்தக்கடவோம். 

சீர்படுத்தும் தேவன்

நவம்பர் 4, 1966 இல், இத்தாலியின் புளோரன்ஸ் நகரை ஒரு பேரழிவுகரமான வெள்ளம் அடித்துச் சென்றது. ஜார்ஜியோ வசாரியின் புகழ்பெற்ற கலைப் படைப்பான “தி லாஸ்ட் சப்பரை” சேறு, தண்ணீர் மற்றும் கொதி எண்ணெய் ஆகியவைகளால் பன்னிரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மூழ்கடிக்கப்பட்டது. அதன் வண்ணப்பூச்சு கரைந்து, அதன் மரச்சட்டம் கணிசமாக சேதமடைந்ததால், அதை பழுதுபார்ப்பது சாத்தியமில்லை என்று பலர் நம்பினர். இருப்பினும், ஐம்பது வருட கடினமான முயற்சிக்குப் பிறகு, வல்லுநர்களும் தன்னார்வலர்களும் தடைகளை மீறி, மதிப்புமிக்க ஓவியத்தை மீட்டெடுத்தனர். 

பாபிலோனியர்கள் இஸ்ரவேலர்களை சிறைபிடித்தபோது, மரணத்தினாலும் அழிவினாலும் அச்சுறுத்தப்பட்ட மக்கள் நம்பிக்கையை இழந்து சீரமைப்பிற்காய் எதிர்பார்த்து காத்திருந்தனர் (புலம்பல் 1). இந்த சூழ்நிலையில் தேவன் எசேக்கியேல் தீர்க்கதரிசியை எலும்புகள் பள்ளத்தாக்கிற்கு கொண்டுபோய், “இந்த எலும்புகள் உயிரடையுமா?” என்று கேட்கிறார். அதற்கு எசேக்கியேல் “கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் அதை அறிவீர்” (எசேக்கியேல் 37:3) என்று பதிலளிக்கிறான். அந்த எலும்புகள் உயிரடையும்படிக்கு தீர்க்கதரிசனம் அறிவிக்கும்படிக்கு தேவன் சொல்லுகிறார். எசேக்கியேல் “தீர்க்கதரிசனம் உரைக்கையில் ஒரு இரைச்சல் உண்டாயிற்று; இதோ, அசைவுண்டாகி, ஒவ்வொரு எலும்பும் தன்தன் எலும்போடே சேர்ந்துகொண்டது” (வச. 7). இந்த தரிசனத்தின் மூலம் இஸ்ரவேலின் மறுசீரமைப்பு எசேக்கியேல் தீர்க்கதரிசியினாலேயே நிகழும் என்பதை தேவன் தெரியப்படுத்துகிறார். 

வாழ்க்கையில் காரியங்கள் உடைக்கப்பட்டு, இனி ஒட்டவைக்கப்படுவது சாத்தியமேயில்லை என்றபோதில், உடைந்த காரியங்களை தேவன் ஒட்டவைப்பதாக உறுதிகொடுக்கிறார். அவர் நமக்கு புதிய சுவாசத்தையும் ஜீவியத்தையும் கொடுக்கிறார்.

தாங்கிப்பிடித்திருக்கும் நம்பிக்கை

“அப்பா எனக்கு பூக்களை பரிசாக அனுப்பியதால் அவர் வீட்டிற்கு வருப்போகிறார் என்பது எனக்குத் தெரியும்.” யுத்தத்தில் என்னுடைய அப்பா காணாமல்போனது தெரியாமல் என்னுடைய ஏழு வயது சகோதரி சொன்ன வார்த்தைகள் இவைகள். அப்பா போருக்கு செல்லுவதற்கு முன்னர், என் சகோதரியின் பிறந்தநாளை முன்னிட்டு அவளுக்கு பூக்களை பரிசாக முன்கூட்டியே ஆர்டர் செய்திருந்தார். அவர் தொலைந்த பின்பு அவைகள் வந்துசேர்ந்தன. அவள் சொன்னது சரியாகிப்போய்விட்டது. என்னுடைய அப்பா யுத்தத்தில் ஒரு பெரிய ஆபத்தை சந்தித்து, வீடு திரும்பினார். பல ஆண்டுகள் கடந்த பின்னரும் என் சகோதரி அந்த பூக்களை ஞாபகமாய் வைத்திருந்தாள். அதைப் பார்க்கும்போதெல்லாம் நம்பிக்கையோடு காத்திருத்தலின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்வாள். 

உடைந்துபோன இந்த பாவ உலகத்தில் நம்பிக்கையை காத்துக்கொள்வது சாதாரணமானது அல்ல. அப்பாக்கள் எப்போதும் வீடுவந்து சேர்வதில்லை. பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் சிலவேளைகளில் நிராசையாகிப் போய்விடுகின்றன. ஆகிலும் கடினமான தருணங்களில் தேவன் நமக்கு நம்பிக்கையை அருளுகிறார். வேறொரு யுத்த காலத்தில், ஆபகூக் தீர்க்கதரிசி, பாபிலோனியர்களால் ஏற்படப்போகிற யுத்தத்தை முன்னறிவித்தார் (ஆபகூக் 1:6; 2 இராஜாக்கள் 24). ஆனாலும், தேவன் நல்லவராகவே இருக்கிறார் என்று உறுதிகூறுகிறார் (ஆபகூக் 1:12-13). தேவன் கடந்த காலத்தில் செய்த நன்மைகளை நினைவுகூர்ந்தவராய், “அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்” (3:17-18) என்று அறிக்கையிடுகிறார். 

சில விளக்கவுரையாளர்கள், ஆபகூக் என்னும் பெயருக்கு “பற்றியிருத்தல்” என்று பொருள் கூறுகிறார்கள். அவர் நம்மை விடாமல் பற்றிப் பிடித்திருப்பதால், சோதனைகளின் மத்தியிலும் அவரை நம் ஒரே நம்பிக்கையாய் பற்றிப் பிடித்திருப்போம்.

ஆவியாலே ஆகும்

ஜெர்கன் மோல்ட்மேன் என்ற தொண்ணூற்று நான்கு வயதான ஜெர்மானிய இறையியலாளர் எழுதிய பரிசுத்த ஆவி பற்றிய புத்தகத்தின் விவாதத்தின் போது, பேட்டியெடுப்பவர் அவரிடம், “நீங்கள் எப்படி பரிசுத்த ஆவியை செயல்படுத்துகிறீர்கள்? மாத்திரை சாப்பிட்டால் செயல்படுமா? மருந்து நிறுவனங்கள் ஆவியானவரை உற்பத்திசெய்கின்றனவா?” என்று கேலியாகக் கேட்டார். மோல்ட்மேனின் புருவம் உயர்ந்தது. தலையை மெல்லமாக அசைத்து, “நான் என்ன செய்யமுடியும்? எதுவும் செய்யாதீர்கள். ஆவியில் காத்திருங்கள், ஆவியானவர் வருவார்” என்று பதிலளித்தாராம். 

நமது ஆற்றலும் நிபுணத்துவமும்தான் காரியங்களைச் செய்ய வைக்கும் என்ற நம்முடைய தவறான நம்பிக்கையை மோல்ட்மேன் சுட்டிக்காட்டினார். தேவன் காரியங்களைச் செய்கிறார் என்பதை செயல்கள் வெளிப்படுத்துகின்றன. திருச்சபையின் துவக்கநாட்களில், மனித யுக்திகளினாலோ அல்லது திறமையான தலைவர்களோ அது சாத்தியமாகவில்லை. மாறாக, “பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல,” அறையில் அமர்ந்திருந்த அனைவரையும் ஆவியானவர் நிரப்பினார் (2:2). அடுத்து, ஒரு புதிய சமூகத்தில் பலதரப்பட்ட மக்களை ஒன்றுதிரட்டுவதின் மூலம் அனைத்து இன மேன்மைகளையும் ஆவியானவர் ஒன்றுமில்லாமல் சிதைத்தார். தேவன் தங்களுக்குள் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதைக் கண்டு சீஷர்களும் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் எதுவும் செய்யவில்லை, “அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்(டனர்)” (வச. 4). 

திருச்சபையோ அல்லது பகிர்ந்து செய்யப்படும் எந்த ஊழியமோ நம்முடைய திறமையினால் சாத்தியமாகக்கூடியது அல்ல. ஆவியானவரால் என்ன செய்யமுடியுமோ அதை மாத்திரமே நாம் முழுமையாய் சார்ந்துகொள்கிறோம். இது நம்மை துணிகரமாகவும் இளைப்பாறவும் செய்கிறது. பெந்தெகொஸ்தே நாளை அநுசரிக்கிற இன்று, ஆவியானவருக்குக் காத்திருந்து செயல்படுவோம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

குறுச்செய்திகள், பிரச்சனைகள் மற்றும் ஜெயம்

ஜிம்மி, சமூக பிரச்சனைகள், அபாயங்கள், மற்றும் பிரச்சனைகள் நிறைந்திருக்கும் உலகத்தின் ஏழ்மையான நாட்டில் ஊழியம் செய்துகொண்டிருக்கும் தம்பதியினரை உற்சாகப் படுத்துவதற்காக அங்கு கடந்து சென்றார். அவர் அனுப்பிய குறுச்செய்திகளிலிருந்து அவர் கடந்துபோன கடினமான பாதைகளை நாங்கள் அறிந்துகொண்டோம்: “சரி நண்பர்களே, ஜெபத்தை ஆரம்பிக்கவேண்டியிருக்கிறது. கடந்த இரண்டு மணி நேரத்தில் நாம் பத்து மைல் தூரத்தைக் கடந்திருக்கிறோம்... அதற்கிடையில் நம்முடைய கார் பன்னிரண்டு தரம் சூடாகிவிட்டது.” வாகன பிரச்சனைகளில் சிக்கி, ஐந்து மணி நேரமாய் அவருடைய செய்திக்காய் காத்திருந்தவர்களை சந்திக்க நள்ளிரவில் வந்து சேர்ந்தார். அதற்கு பின்பதாய் வித்தியாசமான குறுச்செய்திகளை காண நேர்ந்தது. “ஆச்சரியம், அழகான ஒரு ஐக்கியம்... ஜெபம் செய்துகொள்வதற்காக பன்னிரெண்டு பேர் ஒப்புக்கொடுத்து முன்னுக்கு வந்தார்கள். அது ஒரு வல்லமையான இரவாய் அமைந்தது.”  
தேவனுக்கு உண்மையாய் ஊழியம் செய்வது ஒரு சவால். எபிரெயர் 11ஆம் அதிகாரத்தில் இடம்பெற்றிருக்கும் விசுவாச வீரர்கள் இதை அங்கீகரித்துக்கொள்வார்கள். தங்கள் விசுவாசத்தினிமித்தம், சாதாரண மனிதர்கள் சங்கடமான பல சூழ்நிலைகளை எதிர்கொண்டிருக்கின்றனர். “வேறு சிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள்” (வச. 36). அந்த சவால்களை மேற்கொள்ளும்படிக்கு அவர்களுடைய விசுவாசம் அவர்களை நெருக்கி ஏவியது. நமக்கும் அப்படித்தான். நம் நம்பிக்கையை நம்பி வாழ்வது நம்மை ஆபத்தான இடங்களுக்கோ அல்லது வெகுதூரத்திற்கு அழைத்துச் செல்லாமல் போகலாம், ஆனால் அது நம்முடைய தெருக்களுக்கு, வளாகங்களுக்கு, உணவு அறைக்கு அல்லது அலுவலக அறைகளுக்குள் அழைத்துச் செல்லலாம். அது ஒருவேளை அபாயகரமானதாய் இருக்கலாம். ஆனால் நாம் துணிகரமாய் எடுக்கும் அந்த அபாயகரமான முயற்சிகளுக்கு தகுதியான வெகுமதியை நிச்சயமாய் பெற்றுக்கொள்வோம் என்பது அதிக நிச்சயம்.

இப்போது இது வெறுமையாயிருக்கிறது

எனது சகோதரர்களும் எனது குடும்பத்தினரும், நாங்கள் சிறுவயது முதல் வாழ்ந்து வந்த எங்கள் வீட்டிலிருந்த பெற்றோரின் பொருட்களை இடமாற்றம் செய்யும் வேலையில் ஈடுபட்டோம். அன்றைய நாளின் மத்தியானத்தில், கடைசியாய் பொருட்களை அவ்வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு வருமுன்பு, இனி அந்த வீட்டிற்கு நாங்கள் போகப்போவதில்லை என்பதை அறிந்து, அவ்வீட்டின் பின்புற வராந்தாவில் நின்று நாங்கள் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டோம். என் அம்மா என் பக்கம் திரும்பி, “இப்போது இது வெறுமையாயிருக்கிறது” என்று என்னிடம் சொன்னபோது, எனக்கு கண்ணீர் வந்தது. 54 வருடங்கள் நாங்கள் வாழ்ந்த அந்த வீடு தற்போது வெறுமையாயிருக்கிறது. அதைக் குறித்து என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.  
எரேமியாவின் புலம்பல்களின் முதல் வசனத்தோடு என் இதயத்தின் வலி எதிரொலிக்கிறது: “ஜனம்பெருத்த நகரி தனிமையாக உட்கார்ந்திருக்கிறாளே!” (1:1). “அவளுடைய திரளான பாதகங்களினிமித்தம்” (வச. 5) எருசலேம் வெறுமையாய் அமர்ந்திருக்கிறது. அதனுடைய ஜனங்கள் மனந்திரும்ப மறுத்து தேவனுக்கு விரோதமாய் கலகம்பண்ண நினைத்ததால், தேவன் அதின் குடிகளை சிறையிருப்பிற்கு அனுப்பினார் (வச. 18). அனால் என்னுடைய பெற்றோர், பாவத்தினிமித்தம் வீட்டை காலிசெய்யவில்லை. ஆனால் ஆதாமின் பாவத்தினிமித்தம் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்க்கையில் பெலவீனத்திற்கு நேராய் கடந்துசெல்லுகிறான். நமக்கும் வயதாகும்போது, நம்மால் பராமரிக்க முடியாத வீட்டிற்குள் நாம் தனிமையாய் வாழமுடியாது.  
ஆனால் எங்களுடைய அந்த அழகான வீட்டில் நாங்கள் வாழ்ந்த அந்த நினைவுகளுக்காய் நான் நன்றிசெலுத்துகிறேன். வேதனை என்பது அன்பின் விலை. எங்கள் பெற்றோரின் வீட்டை மட்டுமல்ல; எங்கள் பெற்றோரையும் சீக்கிரத்தில் நான் இழக்க நேரிடும். அப்போதும் நான் அழுவேன். இந்த வேதனையான பிரிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அனைத்தையும் சீரமைக்கும்படிக்கு இயேசுவின் வருகையை எதிர்நோக்குகிறேன். அவர் மீது என் நம்பிக்கை இருக்கிறது.  

விரும்பி கீழ்ப்படிதல்

அந்த இளம்பெண்ணின் முகம் கோபத்தையும் அவமானத்தையும் பிரதிபலித்தது. 2022 குளிர்கால ஒலிம்பிக்கின் பனிச்சறுக்கு விளையாட்டில் அவள் பெற்ற வெற்றி இணையற்றது. பல தங்கப் பதக்கத்தை அவள் வென்றிருக்கிறாள். ஆனால் தடைசெய்யப்பட்ட ஒரு போதை வஸ்தை அவள் எடுத்திருக்கிறாள் என்று மருத்துவ பரிசோதனை நிரூபித்தது. அதிக எதிர்பார்ப்பும் மக்களுடைய கண்டனங்களின் அழுத்தமும் தாங்க முடியாத அவள், தொடர்ந்த அவளுடைய விளையாட்டு பயணத்தில் பலமுறை தடுமாற்றம் கண்டு விழுந்திருக்கிறாள். அந்த மறைவான குற்றத்திற்கு முன்பு அவள் தன்னுடைய விளையாட்டில் சுதந்தரமாகவும் உத்வேகத்துடனும் விளையாடினாள். ஆனால் அவளுடைய இந்த விதி மீறல், அவளுடைய கனவுகளை நொறுக்கியது.  
மனுஷீகத்தின் ஆரம்ப நாட்களில், மனிதனுடைய சுயசித்தத்தை செயல்படுத்துகிற வேளையில் கீழ்ப்படிதலின் முக்கியத்துவத்தை தேவன் வெளிப்படுத்தினார். உடைக்கப்படுகிற அனுபவமும் மரணமும் பாவத்தின் விளைவு என்பதினால், ஆதாம் ஏவாளின் கீழ்ப்படியாமை பாவத்தின் பாதிப்புகளை முழு மனுஷீகத்திற்கும் கொண்டுவந்தது (ஆதியாகமம் 3:16-19). ஆனால் அச்சம்பவம் அப்படி முடிந்திருக்கவேண்டியதில்லை. தேவன் அவர்களிடம், “நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்” (2:16-17) என்று கட்டளையிடுகிறார். அவர்கள் கண்கள் திறக்கப்பட்டு, அவர்கள் தேவர்கள் போலாகலாம் என்று எண்ணி, தடைசெய்யப்பட்ட நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை அவர்கள் புசிக்கின்றனர் (3:5; 2:17). அதினிமித்தம் மனுஷீகம் பாவம், அவமானம் மற்றும் மரணம் ஆகியவைகளுக்கு உட்படவேண்டியதாயிற்று.  
தேவன் நமக்கு சுயசித்தத்தையும், அநேக காரியங்களை அனுபவிக்கும் அதிகாரத்தையும் கொடுத்திருக்கிறார் (யோவான் 10:10). நாம் நன்மையை அனுபவிக்கவேண்டும் என்று நம் மீதான அவருடைய அன்பினிமித்தம் அவருக்கு கீழ்படிய நமக்கு அழைப்புக் கொடுக்கிறார். நாம் கீழ்ப்படிதலை தெரிந்துகொள்ளவும், இலச்சை இல்லாத மகிழ்ச்சியான வாழ்க்கையை சுதந்தரித்துக்கொள்ளவும் அவர் நமக்கு உதவிசெய்வாராக.