ஜோஸ் சமீபத்தில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ஒரு இளைஞன். அவனுடைய சகோதரனுடைய திருச்சபைக்கு ஒரு நாள் போயிருந்தான். அவன் திருச்சபைக்குள் நுழைவதைப் பார்த்த அவனுடைய சகோதரனின் முகம் வாடிப்போயிற்று. ஜோஸ் டி-ஷர்ட் அணிந்திருந்ததால், அவனுடைய இரு கைகளிலும் வரையப்பட்டிருந்த டாட்டூக்கள் தெளிவாக பளிச்சிட்டன. அவனுடைய டாட்டூக்கள் அவனுடைய பழைய வாழ்க்கையை நினைவுபடுத்தக்கூடியதாய் இருந்ததினால், அவனை வீட்டிற்கு சென்று ஒரு முழுக்கை சட்டை அணிந்துவரும்படிக்கு அவனுடைய சகோதரன் வலியுறுத்தினான். அசகோதனுடையதைக் கேட்ட ஜோஸ் சோர்ந்துபோய்விட்டான். அவர்களுடைய பேச்சைக் கேட்ட வேறொருவர் அவர்கள் இருவரையும் திருச்சபை போதகரின் முன்னிலையில் கொண்டு நிறுத்தி, நடந்ததை சொன்னார். போதகர் அதைக் கேட்டு புன்னகையோடு தன்னுடைய சட்டையின் பட்டனை அவிழ்த்தார். அவருடைய மார்பு பகுதியில் அவருடைய பழைய வாழ்க்கையை வெளிப்படுத்தும் ஒரு பெரிய டாட்டூ இருந்ததை அவர்களுக்குக் காண்பித்தார். பின்பு ஜோஸைப் பார்த்து, தேவன் நம்மை உள்ளும் புறம்பும் சுத்திகரித்துவிட்டபடியால், உன் கைகளில் இருக்கும் டாட்டூக்களை நீ மறைக்கவேண்டிய அவசியம் இல்லை என்று அறிவுறுத்தினார். 

தாவீது, தேவனால் சுத்திகரிக்கப்பட்ட அனுபவத்தைப் பெற்றுக்கொண்டான். தன்னுடைய பாவத்தை தேவனிடத்தில் அறிக்கையிட்ட தாவீது ராஜா, “எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான்” (சங். 32:1) என்று எழுதுகிறான். மேலும் செம்மையான இருதயமுள்ளவர்களோடு சேர்ந்து ஆனந்த முழக்கமிடுகிறார் (வச. 11). பவுல் அப்போஸ்தலர், கிறிஸ்துவின் மீதான விசுவாசம் நம்மை இரட்சிப்புக்கு நேராய் வழிநடத்தி, அவருக்கு முன்பாக மாசில்லாதவர்களாய் நிறுத்தும் அறிக்கையை வெளிப்படுத்தும் ரோமர் 4:7-8 வேதப்பகுதியில், சங்கீதம் 32:1-2ஐ மேற்கோள் காண்பிக்கிறார்.

இயேசுவில் நம்முடைய பரிசுத்தம் என்பது தோலோடு அல்ல, அவர் நம்மை அறிந்து நம்முடைய இருதயத்தை சுத்திகரிக்கிறார் (1 சாமுவேல் 16:7; 1 யோவான் 1:9). அவருடைய சுத்திகரிக்கும் கிரியையில் இன்று நாம் மகிழ்ச்சியடைவோம்.