கடந்த பல தசாப்தங்களாக திரைப்பட சொற்களஞ்சியத்தில் ஒரு புதிய சொல் நுழைந்துள்ளது, அது “மறுதொடக்கம்”. திரைத்துறை பாணியில், ஒரு பழைய கதையை அதை மறுதொடக்கம் செய்து ஆரம்பிப்பதாகும். சில மறுதொடக்கங்கள் ஒரு அசகாய சூரனை பற்றியோ கற்பனை படைப்பு போன்றோ பழக்கமான கதையை மீண்டும் கூறுகின்றன. மற்ற மறுதொடக்கங்கள் அதிகம் அறியப்படாத கதையை எடுத்து புதிய வழியில் அக்கதையை மறுபரிசீலனை செய்கின்றன. ஆனால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், மறுதொடக்கம் என்பது மீண்டும் செய்வது போன்றது. இது ஒரு புதிய தொடக்கம், பழையதான ஒன்றுக்கு புதிய வாழ்வு கொடுக்கப்படுகிறது.

மறுதொடக்கங்களை உள்ளடக்கிய மற்றொரு கதை உள்ளது, அது நற்செய்தி கதை. அதில், இயேசு தம்முடைய மன்னிப்பு, பரிபூரணம் மற்றும் நித்திய ஜீவனுக்கு நம்மை அழைக்கிறார் (யோவான் 10:10). புலம்பல் புத்தகத்தில், எரேமியா நமக்குத் தேவனின் அன்பு ஒவ்வொரு நாளையும் கூட ஒரு வகையில் மறுதொடக்கம் செய்கிறதை நமக்கு நினைவூட்டுகிறார்: ” நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.” (3:22-23).

தேவனின் கிருபையானது, ஒவ்வொரு நாளையும் அவருடைய உண்மைத்தன்மையை அனுபவிக்க ஒரு புதிய வாய்ப்பாக ஏற்றுக்கொள்ள நம்மை அழைக்கிறது. நம்முடைய சொந்த தவறுகளின் விளைவுகளுடன் நாம் போராடினாலும் அல்லது வேறு பல கஷ்டங்களைச் சந்தித்தாலும் தேவனின் ஆவியானவர் ஒவ்வொரு புதிய நாளிலும், மன்னிப்பு,  புதிய வாழ்க்கை மற்றும் நம்பிக்கையை அருள முடியும். ஒவ்வொரு நாளும் ஒரு வகையான மறுதொடக்கம் ஆகும். நமது சிறந்த இயக்குநரின் வழியைப் பின்பற்றுவதற்கான ஒரு வாய்ப்பு.  அவர் நம் கதையை அவரது பெரிய கதையில் ஒன்றாய் பின்னுகிறார்.