எங்கள் தாழ்வாரத்தில் தோட்டக் குழாய்க்கு அடுத்ததாக ஒரு தளிர் துளிர்ப்பதை நான் கவனித்தபோது, அதனால் என்னவாகப்போகிறது என்று புறக்கணித்தேன். ஒரு சிறிய களை எப்படி நமது புல்வெளியைக் காயப்படுத்தும்? ஆனால் வாரங்கள் செல்ல செல்ல, அந்த களை ஒரு சிறிய புதரின் அளவு வளர்ந்து எங்கள் முற்றத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. அதன் தேவையற்ற தண்டுகள் எங்கள் நடைபாதையின் ஒரு பகுதியில் வளைந்து மற்ற பகுதிகளில் முளைத்தன. அதன் அபாயகரமான வளர்ச்சியைப் புரிந்துகொண்ட நான், என் கணவரின் துணையோடு காட்டுக் களைகளை வேருடன் தோண்டி, களைக்கொல்லியைக் கொண்டு எங்கள் முற்றத்தைப் பாதுகாத்தேன்.

அதேபோலவே பாவத்தின் இருப்பை நாம் புறக்கணிக்கும்போது அல்லது மறுக்கும்போது, அதின் அபாயகரமான வளர்ச்சியால் நமது வாழ்வில் படர்ந்து, நமது அந்தரங்கத்தை இருளாக்கிவிடும். பாவமில்லாத நமது தேவனிடம் எவ்வளவேனும் இருளில்லை. அவருடைய பிள்ளைகளாகிய நாம், பாவங்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம், அதனால் நாம் “அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே” (1 யோவான் 1:7) நடக்கலாம். மனந்திரும்புதலின் மூலம், நாம் மன்னிப்பு மற்றும் பாவத்திலிருந்து விடுதலையை அனுபவிக்கிறோம் (வ. 8-10). நமக்காக இயேசுவென்னும் மிகச்சிறப்பாகப் பரிந்துபேசுகிறவர் உண்டு (2:1). அவர் நம் பாவங்களுக்கான இறுதி விலையை மனமுவந்து செலுத்தினார். ”நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற” (வச. 2) அவருடைய ஜீவரத்தமே அந்த கிரயம்.

நம்முடைய பாவம் தேவனால் சுட்டிக்காட்டப்படும்போது, ​​நாம் மறுப்பு, தவிர்ப்பு அல்லது பொறுப்பிலிருந்து விலகுவதைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் நாம் ஒப்புக்கொண்டு மனந்திரும்பும்போது, நாம் அவரோடும் பிறரோடும் கொண்டிருக்கும் உறவிற்குத் தீங்கு விளைவிக்கும் பாவங்களை அவர் களையெடுக்கிறார்.