2016 ஆம் ஆண்டு தெற்கு லூசியானாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்குப் பிறகு, எனது சமூக ஊடகத்தை அலசுகையில், ​​ஒரு நண்பரின் இடுகையைக் கண்டேன். அவளுடைய வீடு அழிக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட வேண்டும் என்பதை உணர்ந்த பிறகு, என் தோழியின் அம்மா அவளை மனமடிவுண்டாக்கும் சுத்தமாக்கும் வேலையின் மத்தியிலும் தேவனைத் தேடும்படி ஊக்குவித்தார். எனது தோழி பின்னர் வீட்டின் கதவு சட்டகங்களில் வெளிப்பட்ட வேதவசனங்களின் படங்களை வெளியிட்டார். அவ்வசனம் வீடு கட்டப்பட்ட நேரத்தில் எழுதப்பட்டது. மரப்பலகைகளில் வசனங்களை வாசிப்பது அவளுக்கு ஆறுதல் அளித்தது.

வேதவசனங்களை கதவு சட்டகங்களில்  எழுதும் பாரம்பரியம் இஸ்ரவேலருக்கு தேவன் கொடுத்த கட்டளையிலிருந்து உருவாயிருக்கலாம். தேவன், ‌தான் யார் என்பதை நினைவில் கொள்வதற்காக கதவு சட்டகங்களில் தம் கட்டளைகளை இடும்படி இஸ்ரவேலர்களுக்கு அறிவுறுத்தினார். அவர்களின் இதயங்களில் கட்டளைகளை எழுதுவதன் மூலம் (உபாகமம் 6:6), அவர்களின் குழந்தைகளுக்குக் கற்பித்தல் மூலம்  (வ.7), குறியீடுகள் மற்றும் பிற வழிகளைப் பயன்படுத்தி தேவன் கட்டளையிடுவதை நினைவுபடுத்துதல் (வ.8), மற்றும் கதவு சட்டகங்களில்  மற்றும் நுழைவு வழிகளில் வார்த்தைகளை வைப்பது (வ.9) ஆகியவற்றின் மூலம் இஸ்ரவேலர்கள் தேவனுடைய வார்த்தைகளைத் தொடர்ந்து நினைப்பூட்டிக்கொண்டார்கள். அவர் சொன்னதையோ அல்லது அவருடன் செய்த உடன்படிக்கையையோ ஒருபோதும் மறக்க வேண்டாம் என்று அவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.

தேவனுடைய வார்த்தைகளை நம் வீடுகளில் வைப்பதும், அவற்றின் அர்த்தத்தை நம் இதயங்களில் விதைப்பதும், வேதத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள அவருடைய உண்மைத்தன்மையை நம்பியிருக்கும்படியான அடித்தளத்தை உருவாக்க உதவும். சோகமான அல்லது இதயத்தை நொறுக்கும் இழப்பின் மத்தியிலும் கூட நமக்கு ஆறுதலளிக்க அவர் அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தலாம்.