ஒரு நேர்காணலில், கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்ட ஒரு இசைக்கலைஞர், இயேசுவைப் பற்றிப் பேசுவதை நிறுத்தும்படி அவர் வலியுறுத்தப்பட்ட நேரத்தை நினைவு கூர்ந்தார். ஏன்? அவர் தமது வேலையே இயேசுவைக் குறித்தது என்று சொல்வதை நிறுத்தினால், அவரது இசைக்குழு மிகவும் பிரபலமாகி, ஏழைகளுக்கு உணவளிக்க அதிகப் பணம் திரட்ட முடியும் என்று பரிந்துரைக்கப்பட்டது. அதைப் பற்றி யோசித்த பிறகு, அவர் முடிவு செய்தார், “என் இசையின் மையப்புள்ளியே கிறிஸ்துவிலுள்ள என் நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்வதாகும். எந்த வழியிலும் அமைதியாக இருக்கப் போவதில்லை. இயேசுவின் செய்தியைப் பகிர்ந்துகொள்வதே எனக்குள் எரியும் அழைப்பு” என்று அவர் கூறினார்.

இதைக்காட்டிலும் ஆபத்தான சூழ்நிலையில், அப்போஸ்தலர்கள் இதேபோன்ற அறிவுரையைப் பெற்றனர். சிறையில் அடைக்கப்பட்டு அற்புதமாக ஒரு தூதனால் விடுவிக்கப்பட்டவர்கள்,  கிறிஸ்துவுக்குள்ளான புதிய வாழ்க்கையைப் பற்றி மற்றவர்களிடம் தொடர்ந்து சொல்லுமாறு கூறப்பட்டனர் (அப்போஸ்தலர் 5:19-20). அப்போஸ்தலர்கள் தப்பியோடியதையும், அவர்கள் இன்னும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறார்கள் என்பதையும் மதத் தலைவர்கள் அறிந்தபோது, “நீங்கள் அந்த நாமத்தைக்குறித்துப் போதகம்பண்ணக்கூடாதென்று நாங்கள் உங்களுக்கு உறுதியாய்க் கட்டளையிடவில்லையா” (வ. 28.) என்று கண்டித்தனர்.

அவர்களோ “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.” (வ. 29) என்று பதிலளித்தனர். இதன் விளைவாக, தலைவர்கள் அப்போஸ்தலர்களை அடித்து, இயேசுவின் நாமத்தைக் குறித்துப் பேசக்கூடாதென்று கட்டளையிட்டனர் (வ. 40). அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனை சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய் தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள். (வ. 41-42). அவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றத் தேவன் நமக்கு உதவுவாராக!