புத்தக ஆசிரியர்களுக்கான ஒரு கலந்துரையாடலில் நானும் பணியாற்றிய போது, ​​என் தோழி ஒரு அஞ்சல் அட்டையைக் கொடுத்தாள் அதன் பின்புறம் தன் கைப்பட எழுதிய ஜெபம் ஒன்றும் இருந்தது. அவள், அந்த கலந்துரையாடலில் இருந்த ஆசிரியர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படித்ததாகவும், ஒவ்வொரு அட்டையிலும் குறிப்பிட்ட ஜெபத்தை எழுதி, எங்களிடம் கொடுத்தபோது தானும் ஜெபித்ததாகவும் கூறினாள். எனக்கான அவளுடைய தனிப்பட்ட செய்தியால் பிரமிப்படைந்த நான், என் தோழி மூலம் என்னை ஊக்குவித்த தேவனுக்கு நன்றி கூறினேன். பின்னர் நானும் அவளுக்காக ஜெபித்தேன். நிகழ்ச்சியின்போது வலி மற்றும் சோர்வுடன் நான் போராடியபோது, ​​அந்த ஜெபக்குறிப்பு அட்டையை வெளியே எடுத்தேன். அதை மீண்டும் படித்தபோது தேவன் என் ஆவிக்குப் புத்துணர்ச்சி அளித்தார்.

பிறர் வாழ்க்கையை உறுதிப்படுத்தும் ஜெபத்தின் தாக்கத்தை அப்போஸ்தலர் பவுல் அறிந்திருந்தார். ” வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும்” (எபேசியர் 6:12) போராடத் தயாராகும்படி விசுவாசிகளை அவர் வலியுறுத்தினார். அவர் இடைவிடாத மற்றும் நோக்கம் நிறைந்த ஜெபங்களை ஊக்குவித்தார், அதே சமயம் நாம் ஒருவருக்கொருவர் பரிந்து பேசும் மன்றாட்டு ஜெபத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். பவுலும் தமக்கு தைரியம் உண்டாகத்  தமது சார்பான ஜெபங்களையும் கோரினார். “சுவிசேஷத்திற்காகச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிற ஸ்தானாபதியாகிய நான் அதைப்பற்றிப் பேசவேண்டியபடி தைரியமாய்ப் பேசத்தக்கதாக, நான் தைரியமாய் என் வாயைத்திறந்து சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்கு கொடுக்கப்படும்படி எனக்காகவும் விண்ணப்பம்பண்ணுங்கள்.” (வச. 19-20).

நாம் ஒருவருக்காக ஒருவர் ஜெபிக்கும்போது, ​​பரிசுத்த ஆவியானவர் நமக்கு ஆறுதல் அளித்து, நமது தீர்மானங்களைப் பலப்படுத்துகிறார். நமக்கு அவரும், பிறரும் தேவை என்று அவர் உறுதிப்படுத்துகிறார், ஒவ்வொரு ஜெபத்தையும் அவர் கேட்கிறார் என்று உறுதியளிக்கிறார்.  மௌனமாகவோ, சொல்லப்பட்டதோ அல்லது அட்டையில் எழுதப்பட்டதோ அவர் ஜெபங்களுக்குத் தமது பரிபூரண சித்தத்தின்படி பதிலளிக்கிறார்.