பிரெண்டா பெரிய விற்பனை மையத்தின் வெளியே செல்லும் பாதை வழியாய் வந்தபோது, இளஞ்சிவப்பு நிறத்தில் ஏதோ ஒன்று அவளுடைய பார்வையைக் கவர்ந்தது. அந்த பஞ்சுமிட்டாய் நிற கோட் அவளை வெகுவாய் கவர்ந்தது. ஓ! ஹோலி இதை எப்படி விரும்புவாள்? ஒற்றைத் தாயாக அவளுடன் பணிபுரியும் அவளின் சிநேகிதிக்கு இப்படி ஒரு கோட் அவசியப்படும் என்று யோசித்தாள். ஆனால் அவள் தனக்கென்று செலவுசெய்து இந்த கோட்டை ஒருபோதும் வாங்கமாட்டாள் என்பதையும் ப்ரெண்டா நன்கு அறிந்திருந்தாள். கடும் யோசனைக்கு பின்னர், அந்த கோட்டை விலைகொடுத்து வாங்கி, அதை ஹோலியின் வீட்டிற்கு அனுப்பிவைத்தாள். அத்துடன் “நீங்கள் மிகவும் நேசிக்கப்படுகிறீர்கள்” என்று பெயர் குறிப்பிடாத அட்டையை வைத்து அனுப்பி, அதைக் குறித்து மகிழ்ச்சியில் துள்ளி குதித்தாள். 

மகிழ்ச்சி என்பது தேவன் ஏவும் கொடுத்தலுக்கு கிடைக்கும் துணை சலுகையாகும். கொரிந்திய திருச்சபை விசுவாசிகளுக்கு, “அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்” (2 கொரிந்தியர் 9:7) என்று கொடுத்தலின் மேன்மையை வலியுறுத்துகிறார். அத்துடன், “பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்” (வச. 6) என்றும் குறிப்பிடுகிறார்.

சிலவேளைகளில் நாம் காணிக்கைப் பெட்டியில் காணிக்கை போடுகிறோம். சிலவேளைகளில் தகுதியான ஊழியங்களுக்கு அனுப்புகிறோம். சிலவேளைகளில் தேவையிலிருக்கும் நம்முடைய சிநேகிதர்களுக்கு கொடுத்து நம்முடைய அன்பை வெளிப்படுத்த ஏவப்படுகிறோம். பலசரக்கு பைகள், உணவுப்பொருட்கள்… சிலவேளைகளில் இளஞ்சிவப்பு கோட் போன்ற காரியங்கள் அதற்கு வழிவகுக்கலாம்.