Archives: டிசம்பர் 2022

வலிமையாக நிரைவேற்றுதல்

இந்தியாவின் முதுமையான தடகள வீராங்கனையாக மன் கவுர் என்ற பெண் தனது 103 ஆம் வயதில், போலந்து நாட்டில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் தடகள பட்டய போட்டியில் பங்கேற்றார். வியப்பூட்டும்விதமாக ஈட்டி எறிதல், குண்டெறிதல், 60 மீட்டர் விரைவோட்டம், 200 மீட்டர் ஓட்டம் என நான்கு பிரிவுகளில், கவுர் தங்கம் வென்றார். அதிலும் ஆச்சரியமானது, தான் 2017 ஆம் ஆண்டில் ஓடினதைக் காட்டிலும் விரைவாக ஓடியிருந்தார். கவுர் ஒரு கொள்ளுப்பாட்டியாகத் தனது இரண்டாம் நூற்றாண்டில் ஓடியது, எவ்வாறு சிறப்பாக முடிக்க வேண்டுமென்பதைக் காட்டியது.

அப்போஸ்தலன் பவுலும், இளைய சீடனாகிய தீமோத்தேயுவுக்கு, தன்னுடைய வாழ்வின் இறுதி நாட்களுக்குள் வந்திருப்பதை எழுதினார். "நான் தேகத்தை விட்டுப் பிரியும்காலம் வந்தது." (2 தீமோத்தேயு 4:6) என்று எழுதினார். பவுல், "நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன்" (வ.7) என்றார். தமது வியத்தகு சாதனைகளைக் கருத்தில்கொண்டோ, தான் ஏற்படுத்திய அகன்ற தாக்கத்தை எண்ணியோ (அவை ஆச்சரியமானவைதான்) அவருக்கு இத்தகைய நம்பிக்கை வரவில்லை. மாறாக, அவர் தனது விசுவாசத்தைக் காத்துக்கொண்டதை (வ.7) அறிந்திருந்தார். இந்த அப்போஸ்தலன், இயேசுவுக்கு உண்மையுள்ளவராய் இருந்தார். இன்பதுன்பங்களின் மத்தியிலும் தம்மை அழிவினின்று மீட்டவரைப் பின்பற்றினார். தனது உண்மையுள்ள வாழ்வைக் கௌரவப்படுத்தும் விதமாக, "நீதியின் கிரீடத்தோடு" (வ.8) இயேசு ஆயத்தமாய் நின்றுகொண்டிருப்பதை அறிந்திருந்தார்.

பவுல், இந்த கிரீடம் சில குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே என்று சொல்லாமல் , "அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்." (வ.8) என்று வலியுறுத்துகிறார். ஒரு புதிய ஆண்டுக்குள் பிரவேசிக்கும் நாமும்கூட, தம்மை நேசிக்கும் அனைவருக்கும் கிரீடமளிக்க ஆவலாய் இயேசு நிற்பதை நினைவில்கொள்வோம். சிறப்பாக ஓட்டத்தை முடிக்க வாழ்வோம்.

அமளியினூடே கிருபை

நான் எதிர்பாராதவிதமாக ஒரு குட்டித்தூக்கம் போட்டேன். அறைகள் அதிர்வது போல, கீழறையில் என் மகன் கிட்டாரைச் சத்தமாக வாசித்தான். அமைதியில்லை, சமாதானமில்லை, தூக்கம் போனது. சிலநிமிடங்களில் எனது மகள் "வியத்தகு கிருபை" என்ற பாடலை தனது பியானோவில் வாசிக்க, இனிமையான இசை என் காதுகளை வருடியது.

பொதுவாக எனது மகன் கிட்டாரை வாசிக்கையில், எனக்குப் பிடிக்கும். ஆனால் அந்த நொடியில், எனக்கு எரிச்சலூட்டி அமைதியைக் குலைத்தது. இருப்பினும் உடனே ஜான் நியூட்டனின் பாடல் வரிகள், அமளியின் மத்தியில் மேற்கொள்ளும் கிருபையை எனக்கு ஞாபகப்படுத்தியது. நமது வாழ்வின் புயல்கள் எவ்வளவாய் இரைந்தாலும், தேவையற்றதாக நம்மைத் திசைதிருப்பினாலும்; கிருபையைக் குறித்த தேவனின் குறிப்புகள் உண்மையாயும் தெளிவாயும் உள்ளன. எப்போதும் நம்மீதிருக்கும் அவருடைய கவனமான கரிசனையை நினைப்பூட்டுகின்றன.

இந்த உண்மையை நாம் வேதத்தில் பார்க்கிறோம். சங்கீதம் 107:23–32 இல், கப்பலோட்டிகள் தங்களை எளிதாய் அழிக்கக்கூடிய பெரும்புயலை எதிர்த்து கடுமையாய் போராடுகின்றனர். "அவர்கள் ஆத்துமா கிலேசத்தினால் கரைந்துபோகிறது." (வ.26). ஆயினும் நம்பிக்கையிழக்காமல், "கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார்." (வ. 28). இறுதியாக, "அமைதலுண்டானதினிமித்தம அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்; தாங்கள் நாடின துறைமுகத்தில் அவர்களைக் கொண்டுவந்து சேர்க்கிறார்." (வ. 30) என்று வாசிக்கிறோம்.

அமளியின் நேரங்களில், இரைச்சலும் பயமும் அணைகளைத்தாண்டி, நமது ஆத்துமாக்களில் புயலுண்டாக்கலாம். ஆனால், நாம் தேவனை நம்பி அவரிடம் ஜெபிக்கையில் தேவைகளைச் சந்திக்கும் அவரது கிருபையின் பிரசன்னத்தை நாம் அனுபவிப்போம். அவரது நிலையான அன்பென்னும் புகலிடம் அடைவோம்.

நான் நானாகவே

அந்த வாலிப பெண்ணால் தூங்கமுடியவில்லை. மாற்றுத்திறனாளியான அவள், மறுநாள் தன் சபையின் மூலமாக தன் உயர்கல்விக்கான உதவித்தொகையைப் பெறவிருந்தாள். 'ஆனால், இதற்கு நான் தகுதியற்றவள்' என்று சார்லோட் எளியோட் எண்ணினாள். தன்னுடைய ஆவிக்குரிய வாழ்வின் அம்சங்களைக் குறித்துச் சந்தேகப்பட்டவள், தன்னுடைய தகுதியில் திருப்தியடையாமல் படுக்கையில் புரண்டுகொண்டிருந்தாள். மறுநாளும் மன அமைதியின்றி, இறுதியாகத் தனது மேஜைக்கு நகர்ந்து பேனாவையெடுத்து, காகிதத்தில் "நான் பாவிதான்" என்ற அரும்பெரும் பாடலின் வரிகளை எழுதினாள்.

"நான் பாவிதான், ஆனாலும் நீர் மாசற்ற இரத்தம் சிந்தினீர்; வா என்று என்னை அழைத்தீர். என் மீட்பரே, வந்தேன்"

1835 இல் எழுதப்பட்ட இந்த பாடலின் வரிகள், இயேசு எவ்வாறு தன்னுடைய சீஷர்களை தெரிந்துகொண்டு தமக்கு ஊழியம் செய்ய வைத்தார் என்பதை விவரிக்கின்றன. அவர்கள் ஆயத்தமாய் இருந்ததாலல்ல. அவர்கள் அப்படி இருக்கவுமில்லை. அவர்கள் இருந்தவண்ணமாகவே அவர்களுக்கு அவர் அதிகாரம் அளித்ததால்தான். தகுதியற்றவர்களாலான கூட்டம், பன்னிரெண்டு பேரிருந்த குழுவில்; வரி வசூலிப்பவன், அதிகப்பிரசங்கி, கட்டுக்கடங்காத இரு சகோதரர்கள் (பார்க்கவும். மாற்கு 10:35–37), மேலும் அவரை காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து (மத்தேயு 10:4) உள்ளிட்டோர் இருந்தனர். ஆயினும், அவர் அவர்களுக்கு "வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்க, குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ண, மரித்தோரை எழுப்ப, பிசாசுகளைத் துரத்த;" (வ. 8) அதிகாரம் கொடுத்தார். மேலும் இவற்றைச்  செய்கையில் பணம் பெற வேண்டாமென்றும்;  பயணசுமைகள், மாற்று வஸ்திரங்கள் மற்றும் பாதரட்சைகள், வழித்தடிகள் ஆகியவற்றை தவிர்க்கவும் சொன்னார் (வ. 9–10).

"நான் உங்களை அனுப்புகிறேன்" (வ.16) என்றவரே போதுமானவராயிருந்தார். இன்றைக்கும் அவருக்குச் செவிகொடுப்போருக்கு, அவர் போதுமானவர்.

நம் அனைத்து காரியங்களிலும்

1954 இல், மார்ட்டின் லூத்தர் "வியாபாரிகளுக்கிடையே பொதுவான ஒரு விதிமுறை உண்டு, 'மற்றவர்களைக் குறித்து எனக்கு எந்த கரிசனையும் கிடையாது. எனது லாபமும் எனது பேராசையும் நிறைவேறினபின்புதான் மற்ற எல்லாமே'. இது அவர்களுடைய பிரதானமான சட்டமாயுள்ளது" என்றார். இதற்கு இருநூறாண்டுகள் கழிந்து, நியூ ஜெர்சி மாகாணத்தின் மவுண்ட் ஹாலி பகுதியைச் சேர்ந்த ஜான் வுல்மேன் என்பவர் இயேசுவின் மீதிருந்த பற்றுதலை தனது தையற்கடை தொழிலில் வெளிக்காட்டினார். அடிமைகளின் விடுதலைக்கு ஆதரவளிக்கும் விதத்தில், கட்டாய வேலைவாங்குதலில் ஈடுபட்ட நிறுவனங்களின் பஞ்சு மற்றும் சாயப் பொருட்களை வாங்க மறுத்துவிட்டார். சுத்த மனசாட்சியோடு அவர் தனக்கடுத்தவரையும் நேசித்து, தனது காரியங்களில் உத்தமத்தையும் உண்மையையும் காத்து வாழ்ந்தார்.

அப்போஸ்தலன் பவுலும், "கபடமில்லாமல் திவ்விய உண்மையோடே" (2 கொரிந்தியர் 1:12) வாழ பிரயாசப்பட்டார். கொரிந்து பட்டணத்தில் ஒருவன், இயேசுவின் அப்போஸ்தலன் என்கிற தன்னுடைய அதிகாரத்தைக் குறைத்து மதிப்பிட்டபோது, அவர்கள் மத்தியில் தான் நடந்துகொண்ட விதத்தைத் தற்காத்தார். தன்னுடைய வார்த்தைகளும் எழுத்துக்களும், நுட்பமான பரிசோதனையைக்கூட எதிர்கொள்ளக்கூடியவை என்றெழுதினார் (வ.13). தன்னையல்ல, தன்னுடைய செயல்திறனுக்குத் தேவனின் கிருபையையும் வல்லமையையும் தான் சார்ந்துகொண்டிருப்பதை வெளிக்காட்டினார் (வ.12). சுருங்கச் சொன்னால், கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசமே பவுலின் அனைத்து காரியங்களிலும் பரவியிருந்தது.

கிறிஸ்துவின் தூதுவர்களான நாமும் தொழில், குடும்பம் என்று நமது அனைத்து காரியங்களிலும் நற்செய்தியை ஒலிக்கச்செய்வதில் கவனமாயிருப்போம். தேவனின் கிருபையாலும் வல்லமையாலும் அவருடைய அன்பைப் பிறருக்கு நாம் வெளிக்காட்டுகையில், நாம் தேவனைக் கனப்படுத்துகிறோம்; பிறரையும் நேசிக்கிறோம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

குடும்பம் மிகவும் முக்கியமானது

எங்கள் மாமாவின் இறுதி ஊர்வலத்திற்காகவும் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தொண்ணூறு வயது பாட்டியையும் பார்ப்பதற்காய், வெவ்வேறு மாகாணங்களில் வசித்த நான், எனது அக்கா மற்றும் தம்பியுடன் சேர்ந்து விமானத்தின் மூலமாய் வந்தோம். அவர் பக்கவாதத்தால் முடங்கி, பேசும் திறனை இழந்துவிட்டார். அவர் வலது கையை மட்டுமே பயன்படுத்தினார். நாங்கள் அவர்களது படுக்கையைச் சுற்றி நின்றபோது, அவர் அந்தக் கையை நீட்டி எங்களின் ஒவ்வொரு கைகளையும் எடுத்து, ஒன்றன்மேல் ஒன்றாக அவர்களது இதயத்தின்மீது வைத்து, அவற்றைத் தட்டிக்கொடுத்தார். இந்த வார்த்தைகளற்ற சைகையால், உடைபட்டு பிரிந்திருக்கும் எங்களது உடன்பிறப்பு உறவைக் குறித்து அவர் எங்களோடு தொடர்புகொண்டார். “குடும்பம் மிகவும் முக்கியமானது.”

திருச்சபை என்னும் தேவனுடைய குடும்பத்தில் நாமும் உடைக்கப்பட்டவர்களாய் பிரிந்து நிற்கக்கூடும். கசப்பு நம்மை பிரிந்திருக்கச் செய்யும். எபிரெயர் நிருபத்தின் ஆசிரியர், ஏசாவை அவனுடைய சகோதரனிடத்திலிருந்து பிரித்த கசப்பைக் குறித்து குறிப்பிடுகிறார் (எபிரெயர் 12:16). மேலும் சகோதர சகோதரிகளாகிய நாம் தேவனுடைய குடும்பத்தில் ஒருவரிலொருவர் ஐக்கியமாய் இருப்பதற்கு நமக்கு சவால் விடுகிறார். “யாவரோடும் சமாதானமாயிருக்கவும்... நாடுங்கள்” (வச. 14). அதாவது, தேவனுடைய குடும்பத்தில் அனைவரோடும் சமாதானமாய் வாழ்வதற்கு எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு பிரயாசப்படுவோம் என்று வலியுறுத்துகிறார். அத்தகைய ஒவ்வொரு முயற்சியும் ஒவ்வொருவரையும் ஊக்கப்படுத்துகிறது, அவ்வாறு வாழ்வதற்கு தூண்டுகிறது. 

குடும்பம் மிகவும் முக்கியமானது. அவற்றில் நமது பூமிக்குரிய குடும்பங்கள் மற்றும் தேவனுடைய விசுவாசக் குடும்பங்களும் இணைந்ததே. நாம் அன்போடும் ஐக்கியத்தோடும் இருக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் ஏறெடுப்போமா? 

 

துதியின் பள்ளத்தாக்கு

கவிஞர் வில்லியம் கௌபர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியினை மன அழுத்தத்துடனே போராடினார். தற்கொலை முயற்சிக்குப் பிறகு, அவர் ஓர் புகலிடத்திற்கு அனுப்பப்பட்டார். ஆனால் ஓர் கிறிஸ்தவ மருத்துவரின் கனிவான கவனிப்பின் மூலம், இயேசுவின் மீது ஆழமான ஒரு விசுவாசத்தை நடைமுறைப்படுத்தினார். அதன் விளைவாக கௌபர் போதகருடனும் பாடலாசிரியர் ஜான் நியூட்டனுடன் பழக்கம் ஏற்பட்டு, தங்கள் திருச்சபையில் பாடப்பெறுகிற பாடல்களை எழுதுவதற்கு அவரை ஊக்குவித்தனர். அவர் எழுதிய பாடல்களில் ஒன்று, “தேவன் ஆச்சரியமான வழிகளில் கிரியை செய்கிறார்” என்ற பிரபல ஆங்கில பாடல். அதில், “பக்தியுள்ள புனிதர்களே, புதிய தைரியத்தை எடுங்கள். நீங்கள் அஞ்சி நடுங்கும் மேகங்கள் கருணையால் நிறைந்தவை, அவை உங்கள் சிரசில் ஆசீர்வாதத்தை பெய்யப்பண்ணும்" என்பதே. 

கௌபரைப் போலவே, யூதாவின் ஜனங்களும் எதிர்பாராத விதமாக தேவனுடைய கிருபையை சாட்சியிட நேரிட்டது. எதிரி தேசம் அவர்களின்மீது படையெடுத்ததால், யோசபாத் ராஜா ஜெபம் செய்வதற்கு மக்களுக்கு அழைப்புவிடுக்கிறார். யூதாவின் இராணுவப்படை யுத்தத்திற்கு சென்றபோது, அதின் முன்வரிசையில் அணிவகுத்துச் சென்றவர்கள் தேவனை துதித்துக்கொண்டே சென்றனர் (2 நாளாகமம் 20:21). படையெடுக்கும் படைகளில், “ஒருவரும் தப்பவில்லை. அவர்கள் கண்ட ஏராளமான பொருள்களும்... மூன்றுநாளாய்க் கொள்ளையிட்டார்கள்; அது அவ்வளவு மிகுதியாயிருந்தது” (வச. 24-25).

நான்காம் நாளில், தேவனுடைய ஜனத்திற்கு விரோதமாக கலகம்பண்ணுவதற்கு என்று ஒரு எதிரி படை கூடும் இடமே பெராக்கா பள்ளத்தாக்கு (வச. 26) என்று அழைக்கப்பட்டது. அதாவது, “துதியின் பள்ளத்தாக்கு” அல்லது “ஆசீர்வாதம்” என்று பொருள். என்னே மாற்றம்! நம்முடைய கடினமான பள்ளத்தாக்குகளைக்கூட நாம் அவரிடம் ஒப்படைப்போமாகில் அவர் அதை துதியின் ஸ்தலங்களாய் மாற்றுவார். 

 

தேவனின் மென்மையான அன்பு

2017ஆம் ஆண்டு, தடுப்பூசி போடப்படும் ஓர் குழந்தையை அதின் தந்தை அணைத்து தேற்றுவதுபோன்ற ஓர் காணொலி சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. செவிலியர் தடுப்பூசிகளை போட்ட பிறகு, தந்தை தனது மகனை அவரது கன்னத்தில் அணைத்து நெருக்கமாக வைத்திருந்தார். குழந்தை சில நொடிகளில் அழுவதை நிறுத்தியது. அன்பான பெற்றோரின் கனிவான கவனிப்பைக் காட்டிலும் உறுதியளிக்கும் விஷயம் வேறு எதுவும் இல்லை.

வேதாகமத்தில், தேவனை தன் பிள்ளைகளை அதிகமாய் நேசிக்கக்கூடிய பெற்றோராய் சித்தரிக்கும் விளக்கங்கள் இடம்பெற்றுள்ளது. பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசியான ஓசியா, பிளவுபட்ட இஸ்ரவேல் ராஜ்யத்தின் காலத்தில், வடக்கு இராஜ்யத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர்களுக்கு உரைப்பதற்காக ஓர் செய்தியை பெற்றுக்கொள்கிறார். தேவனுடனான உறவுக்குத் திரும்பும்படி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஓசியா இஸ்ரவேலர்களுக்கு, “இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்” (ஓசியா 11:1) என்றும் “அவர்கள் கழுத்துகளின்மேல் இருந்த நுகத்தடியை எடுத்துப் போடுகிறவரைப்போல்” (வச. 4) இருந்தேன் என்றும் குறிப்பிடுகிறார். 

தேவனுடைய அன்பான கவனிப்பைப் பற்றிய இதே உறுதியளிக்கும் வாக்குறுதி நமக்கும் உண்மையாக இருக்கிறது. நம்முடைய வேதனை மற்றும் பாடுகளின் நிமித்தம் அவருடைய அன்பை நிராகரித்து, பின்னர் அவருடைய மென்மையான அரவணைப்பை நாடினாலும் அவர் நம்மை அவருடைய பிள்ளை என்று அழைக்கிறார் (1 யோவான் 3:1). மேலும் அவரது ஆறுதலின் கரங்கள் நம்மை ஏற்றுக்கொள்ள எப்போதும் திறந்திருக்கிறது (2 கொரிந்தியர் 1:3-4).