சில ஆண்டுகளுக்கு முன்பு, “இயேசு என்னுடன் நடக்கிறார்” என்ற பாடலை நற்செய்தி பாடகர் ஒருவர், பாடகர் குழுவுடன் பாடி, பிரபலமாக்கினார். அந்த பாடலின் வரிகளுக்குப் பின்னால் ஓர் அழகான கதை உள்ளது.

ஜாஸ் இசைக்கலைஞர் கர்டிஸ் லுண்டி, அவர் போதை மருந்து மறுவாழ்வு சிகிச்சையில் இணையும்போது, ஒரு பாடகர் குழுவைத் துவங்கினார். தன்னோடு சிகிச்சை பெற்ற சக நோயாளிகளை ஒன்றாக இணைத்து, அவர்களுக்கு ஒரு பழைய பாடலின் மீது இருக்கும் தாகத்தை அடிப்படையாய் வைத்து இந்த புதிய பாடலை அவர்களுக்காக இயற்றினார். “நாங்கள் எங்கள் வாழ்க்கைக்காய் பாடினோம்; இந்த போதைப் பழக்கத்திலிருந்து எங்களை முற்றிலும் விடுவிக்கும்படியாய் கிறிஸ்துவிடம் பாடினோம்” என்று அக்குழுவின்ன உறுப்பினர் ஒருவர் சொன்னார். மற்றொருவர் அந்த பாடலைப் பாடியபோது, அவருடைய தீராத வலி தணிந்ததை சாட்சியிட்டார். அந்த பாடகர் குழு, தாளில் எழுதப்பட்டிருந்த வெறும் வார்த்தைகளை உச்சரிக்கவில்லை; மாறாக, மீட்கப்பட்ட வாழ்க்கைக்கான ஜெபத்தை ஏறெடுத்தனர். 

இன்றைய வேத வாசிப்பு அவர்களின் அனுபவத்தை நன்றாக விவரிக்கிறது. கிறிஸ்துவின் மூலம், எல்லா ஜனத்திற்கும் இரட்சிப்பை கொடுப்பதற்காக தேவன் வெளிப்பட்டார் (தீத்து 2:11). நித்திய வாழ்க்கை என்பது இந்த பரிசின் ஒரு வெளிப்பாடாய் இருக்கையில் (வச. 13), நம்முடைய சுயக்கட்டுப்பாட்டை திரும்பப் பெற்றுக்கொள்வதற்கும், உலக ஆசைகளை புறக்கணிப்பதற்கும், அவரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கைக்கு நம்மை மீட்டெடுக்கவும் தேவன் நம்மில் கிரியை செய்கிறார் (வச. 12, 14). அந்த பாடல் குழுவினர் கண்டறிந்தபடி, இயேசு நம் பாவங்களை மட்டும் மன்னிக்கவில்லை, நம்மை அழிவுக்கேதுவான வாழ்க்கை முறைகளிலிருந்தும் விடுவிக்கிறார். 

இயேசு என்னோடு நடக்கிறார். அவர் உங்களுடனும் நடக்கிறார். அவரை தேடுகிற யாவரோடும் அவர் நடக்கிறார். இப்போது இரட்சிப்பை அருளுவதற்கும், எதிர்காலத்தின் நம்பிக்கையை அருளுவதற்கும் அவர் நம்மோடு இருக்கிறார்.