பாபீ என்னும் நாய், அவர்கள் வீட்டாருடன் கோடை விடுமுறைக்குச் சென்ற இடத்தில் தொலைந்துபோனது. அது அவர்களுடைய வீட்டிலிருந்து 2200 கி.மீ. தூரத்திலிருந்த ஒரு இடம். அவர்களுடைய செல்லப்பிராணியை எல்லா இடங்களிலும் தேடி களைத்துப்போன குடும்பத்தினர், அது கிடைக்காத சோகத்தில் வீடு திரும்பினர்.
ஆறு மாதங்கள் கழித்து, குளிர்காலத்தின் இறுதியில், அழுக்கு மேனியோடு பாபீ வீட்டின் கதவுக்கு முன்பாக வந்து நின்றது. பயங்கரமான பள்ளத்தாக்குகள், ஆறுகள், பாலைவனம், மற்றும் பனிபடர்ந்த மலைகள் என்று எப்படியோ கடந்து அது நேசத்திற்குரிய குடும்பத்தினரைச் சந்திக்க வீடு திரும்பியது.
அந்த ஊரில் நடந்த இந்த சம்பவமானது புத்தகங்களாகவும் திரைப்படங்களாகவும் பல்வேறு விதங்களில் பிரபலமானது. தேவன் அதைக்காட்டிலும் அதிகமான ஏக்கத்தை நம்முடைய இருதயங்களில் வைத்திருக்கிறார். பண்டைய இறையியலாளர் அகஸ்டின் சொல்லும்போது, “நீர் எங்களை உமக்காகப் படைத்திருக்கிறீர்; எங்கள் இருதயம் உம்மிடம் சேரும்வரை அது அலைந்து திரிகிறது”என்று விவரிக்கிறார். இதே ஏக்கத்தை, தன் எதிரிக்குப் பயந்து யூதேயாவின் வனாந்தரங்களில் ஒளிந்துகொண்டு தாவீதும் வெளிப்படுத்துகிறார்: “தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது”(சங்கீதம் 63:1).
ஜீவனைப் பார்க்கிலும் தேவனுடைய கிருபை நல்லது (வச.3) என்பதினால் தாவீது தேவனைத் துதித்தான். அவரை அறியும் அறிவுக்கொப்பானது எதுவுமில்லை. தேவனை விட்டு தூரமாயிருந்த நம்மை அவருடைய அன்பு என்னும் சுயதேசம் சேரும்படிக்கு இயேசுவின் மூலம் தேவன் நமக்கு வழியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். நாம் அவரிடம் திரும்பும்போது, நம்முடைய இருதயத்தின் மெய்யான வீட்டிற்குள் பிரவேசிக்க முடியும்.