ஒரு காலத்தில் உலகின் வலிமையான மனிதராக அறியப்பட்ட அமெரிக்க பளுதூக்கும் வீரர் பால் ஆண்டர்சன், 1956ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், தன்னுடைய கடுமையான காதுவலி மற்றும் 103 டிகிரி காய்ச்சலின் மத்தியிலும் உலக சாதனை படைத்தார். இவருடைய முதல் இரண்டு முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. முன்னணி வீரர்களுக்கு பின்தங்கிய நிலையில் இருந்த இவர், தங்கப் பதக்கத்தை வென்று புதிய ஒலிம்பிக் சாதனையை நிகழ்த்தினார். 

இந்த பருத்த விளையாட்டு வீரர் நம்மில் பலவீனமானவர்கள் செய்யக்கூடிய ஒன்றையே செய்தார். தன்னுடைய பெலத்தை விட்டுவிட்டு, தேவனுடைய புதிய பெலத்திற்காய் ஜெபித்தார். “இது பேரம்பேசுவது அல்ல. எனக்கு உதவி தேவைப்பட்டது” என பின்பாக அவர் தெரிவித்தார். தன்னுடைய கடைசி முயற்சியில், அவர் 413.5 பவுண்டு (187.5 கிலோ) எடையுள்ள பளுவை தன் தலைமட்டும் தூக்கினார். கிறிஸ்துவின் அப்போஸ்தலரான பவுல், “அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்” (2 கொரிந்தியர் 12:10) என்று எழுதுகிறார். பலவீனத்திலே தேவனுடைய பலம் பூரணமாய் விளங்கும் (வச. 9) என்பதை பவுல் அறிந்து, ஆவிக்குரிய பெலனைக் குறித்து இவ்வாறு பேசுகிறார். 

ஏசாயா தீர்க்கதரிசி, “சோர்ந்துபோகிறவனுக்கு அவர்பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்” (ஏசாயா 40:29) என்று வலியுறுத்துகிறார். அந்த பலத்தை பெற்றுக்கொள்ளும் வழி எது? இயேசுவுக்குள் அடைக்கலம் புகுதலாகும். யோவான் 15:5இல், “என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது” என்று இயேசு சொல்லுகிறார். விளையாட்டு வீரர் ஆண்டர்சன், “உலகத்தின் மிக வலிமையான நபர் கூட கிறிஸ்துவின் வல்லமையில்லாமல் ஒன்றும் செய்யக்கூடாது” என்று அடிக்கடி சொல்வது வழக்கம். அதனால் நம்முடைய மாயையான பலத்தின் மீதான நம்பிக்கையை விட்டு விட்டு, நிலையான தெய்வீகத் துணையை சார்ந்துகொள்வது அவசியம்.