பள்ளிகளின் மதிய உணவு கேண்டீன்கள், தேவையை சரியாகக் கணிக்க முடியாததால், அளவுக்கதிகமான உணவைத் தயாரிக்கின்றன. மீதமுள்ள உணவுகள் குப்பையில் கொட்டப்படுகிறது. இன்னும் வீட்டில் சாப்பிடுவதற்கு போதிய உணவு கிடைக்காமல், வாரயிறுதி நாட்களில் பட்டினி கிடக்கும் மாணவர்கள் ஏராளம். ஒரு மாவட்டத்தின் பள்ளி நிர்வாகம், அங்கிருந்த சேவை நிறுவனத்துடன் இணைந்து அதற்கான தீர்வைக் கண்டறிய தீர்மானித்தது. அவர்கள் மீந்த உணவுகளை பொட்டலமாகக் கட்டி மாணவர்கள் வீட்டிற்கு செல்லும்போது அவர்கள் கையில் கொடுத்தனுப்பினர். உணவு வீணாவது மற்றும் பசி ஆகிய இரண்டு பிரச்சனைகளுக்கும் ஒரே நேரத்தில் தீர்வு கண்டனர்.

அதிகமான உணவை நாம் வீணாகப் பார்ப்பதுபோல், அதிகமான பணத்தை மக்கள் வீண் என்று எண்ணுவதில்லை. அந்த பள்ளி நிர்வாகம் தீர்வு கண்டதற்கு பின்பாக இருக்கும் அதே கொள்கையை பவுல் கொரிந்தியருக்கு எழுதிய நிருபத்தில் வலியுறுத்துகிறார். மக்கதொனியாவில் உள்ள திருச்சபைகள் மிகுந்த கஷ்டத்தை அனுபவிப்பதை அவர் அறிந்திருந்தார். எனவே அவர்களுடைய செல்வத்தை தந்து உதவுமாறு கொரிந்து சபையை பவுல் ஊக்கப்படுத்துகிறார் (2 கொரிந்தியர் 8:14). அவருடைய நோக்கம் திருச்சபைகளுக்கிடையேயான நல்லுறவை பலப்படுத்துவதேயாகும். ஆகையால் ஒருவர் கஷ்டப்படும்போது, மற்றவர்கள் அதிக செல்வத்தை அனுபவிப்பதை அவர் விரும்பவில்லை.

கொரிந்திய திருச்சபை மக்கள் தங்களுடையதை கொடுத்துவிட்டு வறுமையில் வாடவேண்டும் என்று பவுல் எதிர்பார்க்கவில்லை. மாறாக, எதிர்காலத்தில் அவர்களுக்கும் இதே போன்ற பணத்தேவை ஏற்படலாம் என்பதை உணர்ந்து, மக்கதோனியர்களின் இக்கட்டில் அவர்களுக்கு தாராளமாய் கொடுத்து உதவும்படி ஊக்குவிக்கிறார். தேவையில் இருப்பவர்களை நாம் பார்க்கும்போது, அவர்களுக்கு ஏதாகிலும் உதவிசெய்ய முடியுமா என்று நாம் நிதானிப்போம். நாம் கொடுப்பது பெரியதோ அல்லது சிறியதோ, அது ஒருபோதும் வீணாகாது!