வயது சென்ற என்னுடைய அத்தை, முகத்தில் புன்னகையுடன் நோய்வாய்ப்பட்ட படுக்கையில் கிடந்தார். அவரது நரைத்த தலைமுடி அவர் முகத்திலிருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டு, சுருக்கங்கள் அவருடைய கன்னங்களை மூடியிருந்தன. அவர் அதிகம் பேசவில்லை, ஆனால் என் பெற்றோருடன் நான் அவரைச் சந்திக்கச் சென்றபோது, அவர் சொன்ன சில வார்த்தைகள் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. “நான் தனிமை அடைவதில்லை, இயேசு என்னுடன் இருக்கிறார்” என்று அவர் முனுமுனுத்தார்.

அன்று ஒரு தனி பெண்மணியாய் நின்ற என் அத்தையின் வார்த்தைகளைக் கேட்டு நான் ஆச்சரியப்பட்டேன். அவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மேலும் அவரது குழந்தைகள் தொலைதூரத்தில் வசித்து வந்தனர். அவரது தொண்ணூறாவது வயதை நெருங்கிக் கொண்டிருக்கையில், அவர் படுத்தபடுக்கையானார். ஆனாலும் அவர் தனிமையில் இல்லை என்று அவரால் சொல்லமுடிந்தது.

“நிச்சயமாக நான் எப்பொழுதும் உங்களுடனே இருக்கிறேன்” (மத்தேயு 28:20) என்ற கிறிஸ்துவின் வார்த்தைகளை என் அத்தை நம்பியதுபோல நாமும் நம்பவேண்டும். உலகத்தில் போய் தன்னுடைய சுவிசேஷத்தை மக்களுக்கு பறைசாற்றுபடியாகவும், தான் அவர்களோடே இருப்பதாகவும் தன்னுடைய சீஷர்களுக்குக் கட்டளையிட்ட (வச. 19) இயேசுவின் ஆவி தன்னுடன் இருப்பதாக என்னுடைய அத்தை நம்பினார். பரிசுத்த ஆவியானவர் சீஷர்களுடனும் நம்முடனும் இருப்பார் என்று இயேசு வாக்குப்பண்ணுகிறார் (யோவான் 14:16-17).

அந்த வாக்குறுதியின் பலனை என் அத்தை அனுபவித்தார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவர் படுக்கையில் படுத்திருந்தபோது, பரிசுத்த ஆவி அவருக்குள் இருந்தது. ஆவியானவர் தம்முடைய சத்தியத்தை, என் அத்தையின் மூலம் ஒரு இளம் மகளாய் இருக்கக்கூடிய எனக்கு பகிர்ந்துகொள்ள உதவிசெய்தார்.