ஆஸ்திரேலியாவின் பிரபல ரீஜண்ட் தேனுண்ணி பறவையினம் ஆபத்திலுள்ளது. அதின் இன்னிசைக்குரல் குருகுகிறது. முன்னர் அதிகளவில் இருந்தவை, தற்போது வெறும் முன்னூறு பறவைகளே மீந்துள்ளனவாம். கற்றுத்தர கூடியவைகள் சிலமட்டுமே உள்ள நிலையில், ஆண்பறவைகள் தங்கள் தனித்துவமான பாடலை மறந்து, தங்கள் துணையை ஈர்க்க தவறுகின்றன.

அதிர்ஷ்டவசமாக சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் இந்த தேனுண்ணிகளை மீட்க ஒரு திட்டம் வகுத்துள்ளனர். அவைகளுக்காக தாங்கள் பாடுவதே அந்தத் திட்டம். அதாவது, பிற தேனுண்ணிகள் பாடுவதை ஒலிப்பதிவு செய்து அவைகளைக் கேட்கச்செய்தால், தங்கள் ஆழ்மனதில் உள்ள பாடலை மீண்டும் கற்கின்றன. ஆண் பறவைகள் இசைமெட்டோடு பாடுகையில் தங்கள் ஜோடிகளை மீண்டும் ஈர்க்கும். அவ்வாறு செய்வதின் மூலம் இனவிருத்தி உண்டாகும் என்று நம்பப்படுகிறது.
தீர்க்கதரிசி செப்பனியா, உபத்திரவத்திலிருந்த ஜனங்களிடம் பேசுகிறார். தங்களுக்குள் மிகவும் சீர்கெட்டுபோனதால், தேவனுடைய நியாயத்தீர்ப்பு வருவதாக உரைக்கிறார் (செப்பனியா 3:1–8). பிற்காலத்தில், கைப்பற்றப்பட்டு சிறையிருப்புக்குள் செல்வதின் மூலம் இது நிறைவேறுகையில், ஜனங்களும் தங்கள் பாடலை மறந்தனர் (சங்கீதம் 137:4). ஆனால் செப்பனியா, நியாயத்தீர்ப்புக்கு பின்னான காலகட்டத்தை முன்னமே பார்க்கிறார். நாடுகடத்தப்பட்ட இந்த ஜனங்களிடம் தேவன் வந்து, அவர்கள் பாவங்களை மன்னித்து, அவர்களுக்காக பாடுகிறார், “அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்” (செப்பனியா 3:17). அதின் முடிவாக, ஜனங்களின் ஆத்மார்த்தமான பாடல் மீட்டெடுக்கப்படும் (வச. 14).

நம்முடைய கீழ்படியாமையாலோ, வாழ்வின் சோதனைகளாலோ நாமும் நம் மனதிற்கினிய பாடலை இழந்திருக்கலாம். ஆனால் நமக்காக மன்னிப்பின் பாடல்களையும், அன்பின் பாடல்களையும் ஒரு குரல் பாடுகிறது. நாமும் அவருடைய இசையை கவனித்துக்கேட்டு அவரோடு சேர்ந்து பாடுவோமாக.