தன் தேசத்தை பாழாக்கும் ஆடம்பரச் செலவுகளையும், ஊழல்களையும் கண்டு சோர்வடைந்த கொரியாவின் அரசர் யோங்ஜோ (1694-1776), காரியங்களை மாற்றத் தீர்மானித்தார். ஆனால், கூழுக்கு ஆசைப்பட்டு மீசையெடுத்த கதைப்போல பாரம்பரியமான தங்கநூல் தையல் கலையை தடைசெய்தார். இதனால், சீக்கிரமே இந்த நுணுக்கமான கலை அறிவு தேசத்தில் அழிந்துபோனது. 

2011ஆம் ஆண்டு, சிம் யியோன்-ஓக் எனும் பேராசிரியர் அந்த பாரம்பரியத்தை மீண்டும் கொண்டுவர தீர்மானித்தார். தங்க இழைகளுக்கு பதிலாக கைகளால் கத்திரிக்கப்பட்ட மல்பெரி பேப்பர்களைக் கொண்டு அந்த பழமையான பாரம்பரிய வழக்கத்திற்கு புத்துயிர் கொடுத்தார். 

யாத்திராகமத்தில், ஆடம்பரமான முறையில் ஆசரிப்புக் கூடாரத்தை கட்டினார்கள், ஆரோனின் ஆசாரிய வஸ்திரத்தில் தங்க இழைகள் கோர்க்கப்பட்டன. திறமையான கைவேலைக் கலைஞர்கள், “அந்தப் பொன்னை, இளநீலநூலோடும் இரத்தாம்பரநூலோடும் சிவப்புநூலோடும் மெல்லிய பஞ்சுநூலோடும் சேர்த்து விசித்திரவேலையாய் நெய்யும்படிக்கு, மெல்லிய தகடுகளாய் அடித்து, அவைகளைச் சரிகைகளாகப் பண்ணினார்கள்.” (யாத்திராகமம் 39:3). அந்த நேர்த்தியான கைவினைத் திறனுக்கு என்ன ஆனது? வஸ்திரம் கிழிந்துவிட்டதா? அவைகள் சூரையாடப்பட்டதா? எல்லாம் வீணாய் போனதா? இல்லவே இல்லை. அவர்கள் அதை நேர்த்தியாய் செய்தனர் ஏனெனில் தேவன் அவர்களுக்கு தெளிவான ஆலோசனைகளை கொடுத்திருந்தார்.

நாம் ஒவ்வொருவரும் செய்ய தேவன் ஏதோவொன்றை நமக்கும் கொடுத்திருக்கிறார். அது நாம் மற்றவர்களுக்கு செய்யும் ஒரு சிறிய அன்பின் உதவியாக இருக்கலாம். நாம் ஒருவருக்கொருவர் சேவைசெய்வதின் மூலம் ஏதாகிலும் ஒன்றை அவருக்கு நாம் தரலாம். கடைசியில் நம்முடைய முயற்சிக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று நாம் கவலைப்படத் தேவையில்லை (1கொரிந்தியர் 15:58). நாம் பரமதகப்பனுக்காய் செய்யும் ஒவ்வொரு காரியமும் நித்தியத்திற்கு பலனளிக்கக் கூடியதாயிருக்கிறது.