அந்த எலியின் மூக்கை ஏதோ ஒன்று சுண்டி இழுத்தது. ஏதோ ஒன்று மிக ருசிகரமான உணவு அருகிலேயே இருந்தது. திடமாக அந்த மணம், பறவைகள் உண்ணும் ருசிகரமான விதைகள் நிறைந்த தீவனத்தொட்டிக்கு நேரே இட்டுச்சென்றது. அந்த எலி சங்கிலியின் வழியே கீழே இறங்கி தீவனத்தை நோக்கி வந்தது, கதவின் இடுக்கின் உள்ளே நுழைந்து இரவெல்லாம்  தின்று கொண்டே இருந்தது. காலையில்தான் தான் சிக்கியிருந்த ஆபத்தை உணர்ந்தது. இப்பொழுது பறவைகள் அந்த தீவனத்தொட்டியின் வழியே அதை கொத்த துவங்கின. ஆனால் விதைகளை தெவிட்ட தெவிட்ட அதிகம் தின்ற காரணத்தினால், அது பெருத்துப் போய் தப்பிக்க இயலாமல் மாட்டிக்கொண்டது.

கதவுகள் நம்மை மிகவும் அற்புதமான இடங்களுக்கு நேரே நடத்தும், அல்லது ஆபத்தான இடங்களுக்கும் நடத்தும். நீதிமொழிகள் 5ல், பாலியல் சோதனைகளை தவிர்க்கும்படியான சாலமோனின் அறிவுரைகளிலும், கதவு பிரதான அம்சமாய் இருக்கிறது. பாலியல் பாவம் கவர்ந்து இழுக்கக் கூடிய ஒன்றாய் இருப்பினும், அதைப் பின்தொடர்ந்தால், ஆபத்து காத்திருக்கிறது (5:3-6) என்று அவர் கூறுகிறார். அதைவிட்டு தூரமாய் தள்ளி இருப்பதே சிறந்தது; ஏனெனில், அந்த கதவின் வழியாக நீங்கள் நடந்தால், நீங்கள் சிக்கிக் கொள்வீர்கள், உங்களுடைய மரியாதையை இழந்து, உங்கள் செல்வமெல்லாம் அன்னியர்களால் பிடுங்கிக் கொள்ளப்படும் (வ.7-11) மாறாக, நம்முடைய வாழ்க்கை துணைகளோடு இன்பமாய் இருப்பதையே சாலமோன் அறிவுறுத்துகிறார் (வ.15-20). அவருடைய அறிவுரை இதற்காக மட்டுமல்லாமல் மற்ற பாவங்களுக்கும் பொருந்தும். பெருந்திண்டியின் சோதனையோ, அல்லது அதிகமாக செலவழிக்கும் சோதனையோ, அல்லது வேறு எதுவாயிருந்தாலும், நாம் சிக்கிக் கொள்ளக் கூடிய கதவை தவிர்ப்பதற்கு தேவன் நமக்கு உதவுவார்.

அந்த வீட்டின் எஜமான், தனது பறவைகளின் தீவனத் தொட்டியில் சிக்கிக்கொண்ட எலியை கண்டு, அதை தனது தோட்டத்தில் விடுவிக்கும் போது, அந்த எலி மிகுந்த சந்தோஷமாய் இருந்திருக்கும். அதிர்ஷ்டவசமாக, தேவனுடைய கரமும் நாம் சிக்கிக்கொள்ளும் போது நம்மை விடுவிக்க ஆயத்தமாக உள்ளது. ஆனால் எல்லாவற்றிற்கும் முன்னராகவே, நாம் சிக்கிக்கொள்ளும் கதவை நாம் தவிர்க்க தேவனின் பெலத்தை கேட்டு பெற்றுக்கொள்வோம்.