கார்ல் என்பவர் புற்றுநோயுடன் போராடினார். அவருக்கு இரண்டு நுரையீரல் மாற்று சிகிச்சை தேவைப்பட்டது. அவர் தேவனிடம் புதிய நுரையீரல் தருமாறு ஜெபித்தார். ஆனால் அவ்வாறு ஜெபிப்பது அவருக்கு சற்று விசித்திரமாய் தோன்றியது. ஏனெனில் “நான் உயிர்வாழ யாரோ ஒருவர் இறக்க வேண்டும்,” என்பதை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. 

கார்லினின் இக்கட்டான நிலை, வேதாகமத்தின் ஓர் அடிப்படைச் சத்தியத்தை வெளிப்படுத்துகிறது. தேவன் மரணத்தின் மூலம் புதிய வாழ்க்கையைத் தருகிறார். இதை யாத்திராகமத்தில் காண்கிறோம். அடிமைத்தனத்தில் பிறந்த இஸ்ரவேலர்கள், எகிப்தியர்களின் அடக்குமுறையால் சோர்ந்துபோயினர். தேவன் தனிப்பட்ட தீர்வைக் கொடுக்காவிட்டால் பார்வோன் தன் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கமாட்டான். ஒவ்வொரு குடும்பமும் ஒரு பழுதற்ற ஆட்டுக்குட்டியை அடித்து அந்த இரத்தத்தை வீட்டுவாசலின் நிலைக்கால்கள் சட்டத்தில் தெளித்தால் மட்டுமே, வீட்டின் தலைச்சன் பிள்ளைகள் உயிருடன் இருக்கும், இல்லையேல் மரித்துவிடும் என்ற நிலையை தேவன் அனுமதிக்கிறார் (யாத்திராகமம் 12:6-7).

இன்று நீங்களும் நானும் பாவத்தின் அடிமைத்தனத்தில் பிறந்துள்ளோம். தேவன் தனிப்பட்ட தீர்வு காண தம் பழுதற்ற ஒரேபேறான குமாரனை சிலுவையில் இரத்தம் சிந்த ஒப்புக்கொடுத்தார். 

அவருடன் சேர்ந்துகொள்ள இயேசு நமக்கு அழைப்பு கொடுக்கிறார். “கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்” (கலாத்தியர் 2:20) என்று பவுல் அறிவிக்கிறார். நாம் தேவனின் பழுதற்ற ஆட்டுக்குட்டியானவரின் மீது விசுவாசம் வைக்கும்போது, நம் பாவத்திற்கு மரித்து அவருடனே கூட நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் உயிர்த்தெழுவோம் (ரோமர் 6:4-5). நாம் ஒவ்வொருமுறையும் பாவத்தின் கட்டுகளுக்கு மறுத்து தெரிவித்து, கிறிஸ்துவின் மீட்பை அங்கீகரித்து நம் விசுவாசத்தை வெளிப்படுத்துவோம். நாம் இயேசுவுடன் மரித்தபோதுதான் மெய்யாகவே பிழைத்திருக்கிறோம்.