“அப்பா, நீங்கள் ஏன் வேலைக்குச் செல்ல வேண்டும்?” நான் அவளோடு விளையாட வேண்டும் என்ற ஆசையால் உந்தப்பட்டு, என்னுடைய இளைய மகள் இக்கேள்வியைக் கேட்டாள். என்னுடைய வேலையைத் தள்ளிவைத்துவிட்டு, அவளோடு நேரம் செலவிடலாம், ஆனால், என்னுடைய வேலையில், நான் கவனிக்க வேண்டிய காரியங்களின் எண்ணிக்கை அதிகம் இருக்கின்றது. இல்லையென்றால், அது ஒரு நல்ல கேள்விதான். நாம் ஏன் வேலை செய்கின்றோம்? நமக்கும், நாம் நேசிப்பவர்களுக்கும் தேவையானவற்றை கொடுப்பதற்காகவா? கூலியில்லாத வேலையைக் குறித்து என்ன சொல்லுவோம்? நாம் ஏன் அதனைச் செய்ய வேண்டும்?

ஆதியாகமம் 2 ஆம் அதிகாரத்தில், தேவன் முதல் மனிதனை தோட்டத்தில், “அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்” (வ.15) என்பதாகக் காண்கின்றோம். என்னுடைய மாமனார் ஒரு விவசாயி, அவர், தனக்கு நிலத்தின் மீதும், உயிரினங்களின் மீதும் உள்ள அன்பினாலேயே விவசாயம் செய்வதாக அடிக்கடி கூறுவார். இது மிகவும் அருமையானது! ஆனால், தன்னுடைய வேலையை நேசிக்காதவர்களுக்கு, அது அநேக கேள்விகளை எழுப்புகின்றது. ஏன் தேவன் நம்மை ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு குறிப்பிட்ட வேலையில் வைத்தார்?

ஆதியாகமம் முதலாம் அதிகாரம் இதற்கான பதிலைத் தருகின்றது.  தேவன் படைத்த உலகத்தை ஆளும்படி, நாம் தேவனுடைய சாயலில் உருவாக்கப் பட்டுள்ளோம் (வ.26). பிறசமயத்தினரின் கதைகளில், அவர்களின் தெய்வங்கள் மனிதனை அடிமைகளாக இருக்கும்படி உருவாக்கின என்பதாகக் காண்கின்றோம். உண்மையான தேவன் மனிதனை அவருடைய பிரதி நிதியாகப் படைத்தார் என்று ஆதியாகமத்தில் காண்கின்றோம்., அவருடைய பிரதி நிதியாக அவருடைய படைப்புகளைக் காக்கும்படி நம்மை விரும்புகிறார். அவர் விரும்பும் அன்பான கட்டளையை நாம் இவ்வுலகில் நிறைவேற்றுவோம். வேலை என்பது தேவன் படைத்த உலகை, அவருடைய மகிமைக்காக பண்படுத்துவதாகும்.