கருத்து வசனம்: பவுலோ, அவன் பம்பிலியா நாட்டிலே நம்மை விட்டுப் பிரிந்து, நம்மோடே கூட ஊழியத்துக்கு வராததினாலே, அவனை அழைத்துக் கொண்டு போகக் கூடாது என்றான். அப்போஸ்தலர் 15:38

1939 ஆம் ஆண்டு, நவம்பர் 27 ஆம் நாள், புதையல்களைத் தேடும் மூன்று பேர், புகைப்பட நபர்களோடு, “ஹாலிவுட்” என்ற பிரசித்திப் பெற்ற திரைபடம் தயாரிக்கும் இடத்திற்கு வெளியேயுள்ள குப்பைகளைத் தோண்ட ஆரம்பித்தனர். எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, அவ்விடத்தில் பொன்னும், வைரமும் முத்துக்களும் நிறைந்த பொக்கிஷம் புதையுண்டு போயிற்று என்ற பேச்சை நம்பி, அவர்கள் இந்த வேலையில் இறங்கினர்.

ஆனால் அவர்கள் அதனைக் கண்டுபிடிக்கவில்லை. 24 நாட்கள் தோண்டிய பின்னர், ஒரு கடின பாறையால் தடுக்கப் பட்டு, வேலையை நிறுத்தினர். 90 அடி அகலமும், 42 அடி ஆழமும் கொண்ட ஒரு பள்ளத்தைத் தான் அவர்களால் தோண்ட முடிந்தது. ஏமாற்றம் அடைந்தவர்களாய் அவ்விடத்தை விட்டு வெளியேறினர்.

தவறு செய்வது மனித இயல்பு. நாம் அனைவருமே ஏதாவது ஒரு இடத்தில் தோல்வியைச் சந்திப்போம். ஊழியப் பிரயாணத்தில், இளைஞனான மாற்கு, பவுலையும் பர்னபாவையும் விட்டுப்       பிரிந்தான், அதன் பின்னர் அவர்களோடு, அதிக நாட்கள் பணிசெய்யவில்லை என வேதாகமத்தில் காண்கின்றோம். இதனாலேயே, அவனுடைய அடுத்த பயணத்தில் அவனை அழைத்துச் செல்ல வேண்டாம் என பவுல் கூறுகின்றார் (15:38). இதனால், பவுலுக்கும் பர்னபாவுக்கும் மன வேறுபாடு தோன்றுகின்றது. ஆனாலும் அவனுடைய ஆரம்ப தோல்வியையும் தாண்டி, பல ஆண்டுகளுக்குப் பின்னர், வியத்தகு வகையில் செயல்பட்டதைக் காண்கின்றோம். பவுல் தன்னுடைய கடைசி காலத்தில் சிறையில், தனிமையில் இருந்தபோது, மாற்குவை அழைக்கின்றார். “மாற்குவை உன்னோடே கூட்டிக் கொண்டு வா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனம் உள்ளவன்” (2 தீமோ. 4:11) என்கின்றார். தேவன் மாற்குவைத் தூண்டி, அவனுடைய பெயரால் ஒரு சுவிசேஷத்தையும் எழுதவைக்கின்றார்.

 நாம் தவறுகளையும், தோல்விகளையும் தனியே சந்திக்கும்படி தேவன் நம்மை விடமாட்டார் என்பதை மாற்குவின் வாழ்வு நமக்குக் காட்டுகின்றது. எல்லாத் தவறுகளையும் விட மேலான நண்பனாகிய தேவன் நமக்கு இருக்கின்றார். நாம் நமது இரட்சகரைப் பின்பற்றும் போது, அவர் நமக்குத் தேவையான பெலனையும், உதவியையும் தருவார்.