பத்தாயிரம் மணி நேரம். எந்த ஒரு கைத்தொழிலிலும் கைதேர்ந்தவராக வேண்டுமெனின், இவ்வளவு நேரத்தை, அதற்குச் செலவிட வேண்டுமென, எழுத்தாளரான மால்காம் கிளாட் வெல் பரிந்துரைக்கிறார். மிகச் சிறந்த கலைஞர்களும், இசைஞர்களும் நிபுணத்துவத்தை அடைவதற்கு, அவர்களின் சுபாவத் திறமைமட்டும் போதுமானதாக இல்லை. அவர்கள், ஒவ்வொரு நாளும், தங்களின் கலையில் மூழ்கி, பயிற்சி எடுத்தப் பின்னரே இத்தகைய நிலையை அடைய முடிந்தது.

பரிசுத்த ஆவியின் வல்லமைக்குள் வாழக் கற்றுக் கொள்வதற்கும், இத்தகைய ஒரு மனநிலையே நமக்குத் தேவை என்பது, சற்று வினோதமாகத் தோன்றலாம். கலாத்தியரில்,  உங்களை தேவனுக்கென்று பிரித்துக்கொள்ளுங்கள் என்று கூறி, பவுல் சபையின் மக்களை ஊக்கப்படுத்துகின்றார். வெறுமனே சட்ட திட்டங்களை கைக்கொள்வதன் மூலம் இதனை அடைய முடியாது, நாம் பரிசுத்த ஆவியானவரோடு நடக்க வேண்டும் என்று பவுல் கூறுகிறார். “நடத்தல்” என்பதற்கு, கலாத்தியர் 5:16 ல் பவுல் பயன் படுத்திய கிரேக்க வார்த்தை (peripateo), ஒன்றினைச் சுற்றி சுற்றி நடத்தல் அல்லது பயணித்தல் என்பதாகப் பொருள்படும். எனவே, ஆவியானவரோடு நடத்தல் என்பதன் மூலம் பவுல் கூற விரும்புவதென்னவெனின், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை ஒரு முறை மட்டும் அநுபவிப்பதல்ல, அனுதினமும் அவரோடு பயணம் செய்வதேயாகும்.

பரிசுத்த ஆவியானவர் நம்மோடிருந்து, அவர் நமக்குச் சொல்லும் வேலையை நாம் செய்யும் படி, நமக்கு ஆலோசனை தந்து, வழிநடத்தி, தேற்றும்படி, அவர் நம்மை முழுவதும் நிரப்புமாறு நாம் ஜெபிப்போம். இவ்வாறு நாம் பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்படும் போது (வ.18), அவருடைய வார்த்தையை கேட்பதிலும், அவருடைய வழிகாட்டலின்படி நடப்பதிலும் நாளுக்கு நாள் முன்னேற்றம் காண்போம். பரிசுத்த ஆவியானவரே, இன்றைக்கும், இனிவரும் நாட்களிலும் நான் உம்மோடு நடக்க, எனக்கு உதவியருளும்.