என்னுடைய உறவினர் ஒருவர், அவருடைய நான்கு வயது மகள் கெய்லினுடன் வந்திருந்தமையால், அந்தச் சனிக்கிழமை மாலை மிகவும் இனிமையாக இருந்தது. நாங்கள் வெளியில் சோப்புக் குமிழிகளை ஊதி மகிழ்ந்தோம், வண்ணமிடும் புத்தகத்தில் வண்ணமடித்தோம், நிலக்கடலை, வெண்ணெயோடு ரொட்டிகளைச் சாப்பிட்டு மகிழ்ந்தோம். அவர்கள் திரும்பிச் செல்லும்படி காரில் ஏறினபோது, கெய்லின் காரின் ஜன்னலைத் திறந்து இனிமையாக, “என்னை மறந்துவிடாதீர்கள், ஆனி அத்தை” என்றாள். நான் விரைந்து காரின் அருகில் சென்று, “என்னால் உன்னை மறக்கவே முடியாது, நான் சீக்கிரத்தில் உன்னை மீண்டும் சந்திப்பேனென உனக்கு வாக்களிக்கிறேன்” என்றேன்.

இயேசுவின் சீடர்கள் பார்த்துக் கொண்டிருக்கையில் “அவர்கள் கண்களுக்கு முன்பாக” ஒரு மேகம் அவரை வானத்திற்கு எடுத்துக் கொண்டது என அப்போஸ்தலர் 1ஆம் அதிகாரத்தில் வாசிக்கின்றோம் (வச. 9). தங்களுடைய எஜமானன் தங்களை மறந்து விடுவாரோ என்று அவர்கள் எண்ணியிருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். ஆனால், அவர் சீடர்களிடம், தன்னுடைய ஆவியை அவர்களோடிருக்கும்படி அனுப்புவதாகவும், அந்த பரிசுத்த ஆவியானவர் அவர்களைப் பெலப்படுத்தி வரப்போகின்ற உபத்திரவக் காலத்தில் அவர்களை வழி நடத்த உதவுவார் எனவும் வாக்களித்தார் (வச. 8) மேலும், நான் போய் உங்களுக்காக ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்வேன் (யோவா. 14:3) என்றார். ஆனாலும் அவர்கள் எவ்வளவு காலம் நாங்கள் காத்திருக்கவேண்டுமென அதிசயித்தனர். ஒரு வேளை அவர்களும், இயேசுவே, எங்களை மறந்து விடாதீர்கள்! எனச் சொல்ல விரும்பியிருப்பார்களோ? 

இயேசுவின் மீது விசுவாசம் வைத்திருக்கும் நமக்குள்ளும் பரிசுத்த ஆவியானவர் வாசம் செய்கின்றார். அவர் எப்போது மீண்டும் வந்து நம்மையும், அவருடைய படைப்புகள் அனைத்தையும் மீட்டுக் கொள்வார் என்று எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறோம், இது நிச்சயம் நடக்கும். அவர் நம்மை மறந்து விடவில்லை. “ஆகையால் நீங்கள் செய்து வருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்” (1 தெச. 5:11).