சேவியர் மெக்கூரியின் பத்தாவது பிறந்த நாளை முன்னிட்டு, அவனுடைய அத்தை செலினா கண்ணாடி ஒன்றை பரிசாக அனுப்பியிருந்தார். கண்ணாடியை முகத்தில் மாட்டியதுமே அவன் அழுதுவிட்டான். பிறவிலேயே அவனுக்கு நிறக்குருடு இருந்தது. இதுவரையிலும் பார்த்த எல்லாமே சாம்பல், வெள்ளை, கருப்பு நிறங்களில் தான் தெரிந்திருந்தன. ஆனால் அவனுடைய அத்தை அனுப்பியிருந்தது என்குரோமா கண்ணாடிகள்; அதனால் தன் வாழ்நாளிலேயே முதன்முதலாக அவன் நிறங்களைப் பார்க்கமுடிந்தது. தன்னைச் சுற்றிலுமிருந்த ஒவ்வொரு அழகையும் கண்டு அவன் மகிழ்ச்சியில் திளைத்தபடியால், ஏதோ அற்புதம் நிகழ்ந்துவிட்டது போல அவனுடைய குடும்பத்தாரும் உணர்ந்தார்கள்.

தேவனிடமிருந்து வண்ணவண்ண ஒளிக்கதிர்கள் பளிச்சிட்ட காட்சியின் அழகைக் கண்டபோது, அப்போஸ்தலனாகிய யோவான் திக்குமுக்காடிப் போனார் (வெளி. 1:17). உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை அவருடைய முழுமகிமையில் காண்கிற பாக்கியம் யோவானுக்கு சற்று கிடைத்தது. “வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார். வீற்றிருந்தவர், பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார்; அந்தச் சிங்காசனத்தைச்சுற்றி ஒரு வானவில்லிருந்தது; அதுபார்வைக்கு மரகதம்போல தோன்றிற்று … அந்தச் சிங்காசனத்திலிருந்து மின்னல்கள் … புறப்பட்டன” (வெளி. 4:2-5).

முன்னொரு காலத்தில் எசேக்கியேல் இதைப் போன்றதொரு தரிசனத்தைக் கண்டார். “நீலரத்தினம் போல விளங்கும் ஒரு சிங்காசனத்தின் சாயலும்” அதன் மீது உட்கார்ந்திருந்தவர் “அக்கினிமயமான சொகுசாவின்  நிறமாக இருந்ததையும், அவரைச் சுற்றிலும் மகிமையின் பிரகாசமாக இருந்ததையும் கண்டார்.

உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை ஒரு நாளில் நாம் முகமுகமாகச் சந்திக்கப்போகிறோம். அப்போது நாம் காணப்போகிற மிக அற்புதமான காட்சியை இந்தத் தரிசனங்கள் சற்றே நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. தேவனுடைய சிருஷ்டிப்பில் இப்போது வெளிப்படுகிற தேவ அழகைக் கண்டு நாம் கொண்டாடலாம், இனி வெளிப்படயிருக்கும் மகிமையைக் காண்கிற ஆவலோடு வாழலாம்.