1983ம் வருடம், ஜுலை 18ம் தேதியன்று, அமெரிக்க விமானப்படையின் தளபதி ஒருவர் நியூ மெக்சிகோவிலுள்ள அல்புகர்க் என்கிற இடத்தில் காணாமல் போனார். அதன்பிறகு அவரைப் பற்றிய செய்தியே இல்லை. முப்பத்தைந்து வருடங்களுக்கு பிறகு, அவர் கலிஃபோர்னியாவில் இருப்பதாக அதிகாரிகள் கண்டுபிடித்தார்கள். “வேலையால் மனஅழுத்தம் அடைந்து” அவர் ஓடிவிட்டதாக நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருந்தது.

முப்பத்தைந்து வருடங்கள் ஓடிக்கொண்டிருந்திருக்கிறார்! ஏதாவது தீங்கு வந்துவிடுமோ என்றே பாதி வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்! அவர் எப்போதும் கவலையோடும் சித்தப்பிரமையோடும்தான் அலைந்திருப்பார் என்று நினைக்கிறேன்.

இவ்வாறு “ஓடுவதில்” எனக்கும் கொஞ்சம் அனுபவமுண்டு. ஆனால், என் வாழ்க்கையில் ஏதாவது கடமையைப் புறக்கணித்து, சரீர ரீதியாக நான் ஓடினது கிடையாது. மாறாக, ஏதாவது ஒன்றை நான் செய்யும்படி, ஏதாவது விஷயத்தை நான் எதிர்கொள்ளும்படி அல்லது அறிக்கையிடும்படி தேவன் என்னிடம் எதிர்பார்த்திருப்பார். அதில் நான் தவறியிருப்பேன். அதைதான் ஓடுவது என்று குறிப்பிடுகிறேன்.

யோனா தீர்க்கதரிசியும்கூட அவ்வாறு ஓடினவர்தானே! நினிவேயில் சென்று பிரசங்கிக்கும்படி தேவன் சொன்னதை அவர் கேட்கவில்லை (யோனா 1:1-3). ஆனால், தேவனை விட்டு அவர் எங்கே ஓடமுடிந்தது! அவருடைய சம்பவத்தை அறிந்திருப்பீர்கள் (வச. 4,17). புயல் வீசுகிறது, மீன் விழுங்குகிறது, மீனின் வயிற்றில் இருக்கிற சமயத்தில், தான் செய்த தவறுக்கான பலனை எண்ணிப்பார்க்கிறார்; தேவனிடம் உதவி வேண்டுகிறார் (யோனா 2:2).

யோனா குறையுள்ள ஒரு தீர்க்கதரிசி. ஆனால், அவருடைய சம்பவத்திலும்கூட நம்மை ஊக்கப்படுத்துகிற ஒரு விஷயம் இருக்கிறது. அதாவது, யோனா பிடிவாதமாக இருந்தபோதிலும் தேவன் அவரைக் கைவிடவில்லை. வேறுவழியே இல்லாத நிலையில் தேவனிடம் அவர் உதவிகேட்டபோது, தம் சொல்லுக்கு இணங்காத ஊழியனை அவர் கிருபையோடு காப்பாற்றினார் (வச. 2).  நம்மையும் அவர் அப்படித்தான் நடத்துகிறார்.