Month: ஜூன் 2019

நம்முடைய பலவீனங்களில்

அனி ஷீஃப் மில்லர் என்கிற பெண்மணி தன்னுடைய 90வது வயதில் 1999ம் ஆண்டு மரித்தார். ஆனால், 1942ம் ஆண்டிலேயே அவர் மரித்திருக்க வேண்டியவர். அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டு, இரத்தத்தொற்று உண்டானது. அனைத்து சிகிச்சைகளும் தோல்வியடைந்தன. அப்போது அதே மருத்துவமனையிலிருந்த நோயாளி ஒருவர், தனக்கு தெரிந்த விஞ்ஞானி ஒருவர் அற்புதமான ஒரு மருந்தைக் கண்டுபிடித்து வருவதாகக் கூறினார், அந்த மருந்தில் கொஞ்சத்தை அனிக்கு வாங்கித் தரும்படி அரசாங்கத்தை அனியின் மருத்துவர்கள் வற்புறுத்தினார்கள். அந்த மருந்தைக் கொடுத்ததும், ஒரே நாளில் அவருக்கு ஜுரம் நீங்கி, உடல் நிலை சாதாரணமானது! பெனிசிலின் மருந்து அனியின் உயிரைக் காப்பாற்றியது.

விழுதலுக்கு பிறகு, மனிதர்கள் அனைவருமே நாசகரமான ஓர் ஆவிக்குரிய நிலையை அனுபவித்திருக்கிறார்கள். அதற்கு காரணம் பாவம். ரோமர் 5:12. இயேசு மரித்ததும், உயிர்த்தெழுந்ததும், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையுமே நாம் அதிலிருந்து மீளுவதைச் சாத்தியமாக்கியுள்ளன.ரோமர் 8:1-2. பூமியில் நாம் பரிபூரண வாழ்க்கையை அனுபவித்து மகிழவும், நித்திய வாழ்வில் தேவனுடைய பிரசன்னத்தில்வாழ்ந்து மகிழவும் பரிசுத்த ஆவியானவர் நமக்கு அருள்செய்கிறார். வசனங்கள் 3-10. “இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.” வசனம் 11.

உங்களுடைய பாவ இயல்பானது உங்களிடமிருந்து வாழ்க்கையை உறிஞ்சி எடுத்துவிடும் போலத் தோன்றும்போது, இரட்சிப்பின் ஆதாரமாகிய இயேசுவை நோக்கிப்பார்த்து, அவருடைய ஆவியின் வல்லமையால் பெலப்படுங்கள். வசனங்கள் 11-17. “ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார்;” கூடவே “தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறார்.” வசனங்கள் 26-27.

வில்லன்களை விடுவித்தல்

காமிக் புத்தக ஹீரோக்கள் எப்போதுமே பிரபலம்தான். 2017ல் மட்டும் ஆறு சூப்பர்ஹீரோ படங்கள், 4 பில்லியன் அமெரிக்க டாலர் தொகைக்கு பாக்ஸ்  ஆபீஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளன. ஆக்சன் ஹீரோ படங்கள் மக்களிடம் அமோக வரவேற்பைப் பெறுவதற்கான காரணம் என்ன?

அப்படிப்பட்ட கதைகள் எல்லாமே தேவனுடைய மாபெரிய சரித்திரம் ஒத்திருப்பதே அதற்கு ஒரு காரணமாகும். ஒரு ஹீரோ இருப்பார், ஒரு வில்லனும் இருப்பார், மக்களை அவரிடமிருந்து காப்பாற்றவேண்டும், எனவே பரபரப்பான ஆக்சன் காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.

இந்தச் சம்பவத்தில், முக்கிய வில்லன், நம் ஆத்துமாக்களின் சத்துருவாகிய சாத்தான். ஏராளமான “குட்டி” வில்லன்களும் இருக்கிறார்கள். உதாரணமாக, தானியேல் புத்தகத்திலுள்ள நேபுகாத்நேச்சார் அப்படிப்பட்டவர்தான். அன்றைய உலகின் பெரும்பகுதியை ஆட்சிசெய்தவர், அவர் ஒரு மாபெரும் சிலையை நிறுவி, அதைத் தொழுதுகொள்ளாத அனைவரையும் கொன்றுபோடத் தீர்மானித்தார். தானி 3:1-6. தைரியமிக்க மூன்று யூத அதிகாரிகள் அதற்கு மறுத்தார்கள். வசனங்கள் 12-18. எரிகிற அக்கினி சூளையிலிருந்து அற்புதமாக தேவன் அவர்களை விடுவித்தார். வசனங்கள் 24-27.

ஆனால் இங்கு எதிர்பாரா ஒரு திருப்பம்; இந்த வில்லனுடைய மனது மாற ஆரம்பிக்கிறது. பிரமிப்பூட்டும் அந்த நிகழ்ச்சியைப் பார்த்து நேபுகாத்நேச்சார், “சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம்” என்று சொன்னார். வசனம் 28.

அந்த தேவனுக்கு விரோதமாகப் பேசுகிற எவனும் கொல்லப்படுவான் என்றும் மிரட்டுகிறார். வசனம் 29. உண்மையில், அவருடைய உதவி தேவனுக்கு தேவையில்லை என்பதை உணரவில்லை. தேவனைப்பற்றி நேபுகாத்நேச்சார் இன்னும் அதிகமாக அறிந்துகொண்டார் என்பதை 4ம் அதிகாரத்தில் பார்க்கிறோம். அது வேறு கதை.

நேபுகாத்நேச்சார் ஒரு வில்லன் மட்டுமல்ல, ஆவிக்குரிய பயணத்தை மேற்கொண்டிருந்த ஒருவரும் கூட. தேவனுடைய மீட்பின் சம்பவத்தில், நம்முடைய ஹீரோவான இயேசு, யாரையெல்லாம் காப்பாற்றமுடியுமோ அவர்களை எல்லாம் தேடிச்செல்கிறார். நம் மத்தியில் இருக்கிற வில்லன்களைக் கூட தேடிச் செல்கிறார்.

குச்சி பொம்மை ஓவியத்தின்மூலம் பாடம்

அவள் என்னுடைய தோழி, என்னுடைய ஆலோசகரும்கூட, அவள் ஓர் ஓவியம் வரைந்தாள். குச்சி பொம்மை போன்ற ஓவியம். அந்த ஓவியத்திற்கு “தனிப்பட்ட வாழ்க்கை” என்று பெயரிட்டாள். பிறகு அந்த ஓவியத்தைச் சுற்றிலும் அரை அங்குல அளவு பெரிதாக வெளிக்கோட்டை வரைந்தாள். அந்த ஓவியத்திற்கு “வெளிப்படையான வாழ்க்கை” என்று பெயரிட்டாள். இந்த இரண்டு ஓவியங்களுக்கும் இடையேயான வித்தியாசம்தான், நம் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் வெளிப்படையான வாழ்க்கைக்கும் இடையேயான  நிலைப்பாட்டைக் காட்டுகிறது.

அந்த ஓவியத்தைப் பார்த்தவாறே, “வெளிப்படையான வாழ்க்கையைப் போலவே என்னுடய தனிப்பட்ட வாழ்க்கையும் இருக்கிறதா? என்னிடம் நிலைப்பாடு காணப்படுகிறதா?” என்று சிந்தித்தேன்.

கொரிந்துவிலிருந்த சபைக்கு பவுல் நிருபங்களை எழுதினார். இயேசுவைப் போல் வாழும்படி அன்பையும் ஒழுக்கத்தையும் வலியுறுத்துகிறார். பிறகு, தன்னை எழு பலமுள்ளவன் என்றும், தோற்றத்தில் பலவீனன் என்றும் குற்றஞ்சாட்டினவர்களுக்கு (2 கொரி. 10:10) அந்த நிருபத்தின் இறுதியில் அவர் பதிலளிக்கிறார். இவ்வாறு விமர்சித்தவர்கள் சிறந்த பேச்சால், பணம்வாங்கி போதிப்பவர்களாக இருந்தார்கள். பவுல் கல்வித்திறனில் சிறந்து விளங்கினாலும், மக்கள் புரிந்துகொள்கிற விதத்தில், எளிமையாகப் போதித்தார். கொரிந்தியருக்கு  எழுதின முதலாம் நிருபத்தில் “என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாயிருந்தது” என்று எழுதியிருந்தார் (1 கொரி. 2:4). ஆனால் இரண்டாவது நிருபத்தில் அவர் எழுதுகிற ஒரு விஷயம் அவருடைய ஒழுக்கத்தைச் சுட்டிக்காட்டுகிறது: “அப்படிச் சொல்லுகிறவன், நாங்கள் தூரத்திலிருக்கும்போது எழுதுகிற நிருபங்களால் வசனத்தில் எப்படிப்பட்டவர்களாயிருக்கிறோமோ, அப்படிப்பட்டவர்களாகவே சமீபத்திலிருக்கும்போதும் கிரியையிலும் இருப்போம் என்று சிந்திக்கக்கடவன்” (2 கொரி. 10:11).

தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை எப்படியோ, அப்படியே தன்னுடைய வெளிப்படையான வாழ்க்கையும் இருப்பதாக பவுல் கூறினார். நாம் எப்படி இருக்கிறோம்?

நம்மை அறிந்திருக்கிற இரட்சகர்

“அப்பா, நேரம் என்ன?” பின்இருக்கையில் அமர்ந்திருந்த என் மகன் கேட்டான். “5:30” என்று சொன்னேன். அடுத்து அவன் என்ன சொல்லுவான் என்பது எனக்குத் தெரியும். “இல்லை, 5:28தான் ஆகிறது!” அவனுடைய முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி, அப்படியொரு சிரிப்பு. எனக்கும் சந்தோஷமாக இருந்தது.

பிள்ளைகளை கருத்தோடு கவனிக்கிற பெற்றோர்போலவே, நானும் என்னுடைய பிள்ளைகளை நன்கு அறிவேன். அவர்களை படுக்கையிலிருந்து எழுப்பும்போது என்ன சொல்லுவார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களுக்குப் பிடித்தமான மதிய சாப்பாடு என்னவென்று தெரியும். அவர்களுடைய விருப்பங்கள், ஆசைகள், முன்னுரிமைகள் என்ன என்பதுபோன்ற பலவிஷயங்கள் அவர்களைப் பற்றித் தெரியும்.

ஆனால், நம் ஆண்டவர் நம்மைப் பற்றி அறிந்திருக்கிற அளவுக்கு, என் பிள்ளைகளைப் பற்றி, உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் எல்லாமே எனக்குத் தெரிந்திருந்தது என்று சொல்லமுடியாது.

இயேசு தம்முடைய மக்களை அதிகமாக அறிந்திருந்தார் என்பதை யோவான் 1ல் அறியமுடிகிறது. இயேசுவை வந்து சந்திக்கும்படி நாத்தான்வேலை பிலிப்பு அழைத்து வருகிறார், நாத்தான்வேல் இயேசுவின் அருகே சென்றதும், “இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்” என்று இயேசு சொன்னார். வச 47. நாத்தான்வேல் திகைத்து, “நீர் என்னை எப்படி அறிவீர்?” என்று கேட்கிறார். கேள்விக்கு சம்பந்தமே இல்லாததுபோல, அத்திமரத்தின்கீழ் கண்டதாக, இயேசு பதிலளிக்கிறார் வச 48

அந்தத் தகவலை இயேசு எதற்காகச் சொன்னார் என்பது நமக்குத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் நாத்தான்வேலுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும்!   அதனால்தான் வியப்புநிறைந்தவராக, “ரபீ, நீர் தேவனுடைய குமாரன்” என்று சொல்லுகிறார். வச 49.

இதேபோல நம் ஒவ்வொருவரையும் நெருக்கமாக, முழுவதுமாக, பூரணமாக இயேசு அறிவார், அவ்வாறு அறிந்துகொள்ளவேண்டும் என்றுதான் நாமும் விரும்புவோம். அவர் நம்மை முற்றிலும் ஏற்றுக்கொள்கிறார் நாம் அவருடைய சீடர்களாக மட்டுமல்ல, அவருடைய அன்புள்ள சிநேகிதராகவும் இருக்கும்படி அவர் நம்மை அழைக்கிறார்.