காப்பாற்றப்பட்ட ஒரு மொட்டைத் தலைக் கழுகை மிக அருகில் பார்த்தபோது, எங்கள் பேரப்பிள்ளைகள் அதிகக் குதூகலமடைந்தார்கள். அதை தொட்டுப்பார்க்கவும் அவர்களுக்கு அனுமதி கிடைத்தது. மிருகக் காட்சி சாலையின் தன்னார்வலர் கரத்தில் அமர்ந்திருந்த வலிமையான அந்தக் கழுகின் இறக்கை ஆறரை அடி நீளம் கொண்டது என்று தெரிந்தபோது அதிக ஆச்சரியம் அடைந்தேன். ஆனாலும் அதன் எலும்புகள் திண்ணமாக இல்லாத காரணத்தால் அதன் எடை வெறும் மூன்றரை கிலோ மட்டுமே.

கீழ் நோக்கிப் பாய்ந்து தன் கூர்நகங்களில் இரையைப் பிடிக்க ஏதுவாக ஒரு ஏரியின் மேல் பறந்து கொண்டிருந்த ஒரு கழுகை முன்பு பார்த்ததை இந்தக் கழுகு எனக்கு நினைவுபடுத்தியது. முன்பு ஒரு முறை ஒரு குளத்தின் கரையில் அசையாமல் நின்று கொண்டிருந்த நீல நாரையைப் பார்த்ததை மனக் கண் முன் கொண்டுவந்தேன். அது தன்னுடைய நீண்ட அலகை தண்ணீருக்குள் அமிழ்த்தி இரையைப் பிடிக்கத் தயாராக நின்றது. நமது எண்ணங்களை நம்மை சிருஷ்டித்தவரை நோக்கித் திருப்ப இந்த இரண்டு பறவைகளைப் போல ஏறத்தாழ 10,000 வகைப் பறவைகள் உள்ளன.

யோபின் புத்தகத்தில், அவரது கஷ்டங்களுக்கான காரணங்களைப் பற்றி அவர் நண்பர்கள் விவாதிக்கும்போது, “சர்வ வல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியக்கூடுமோ?” (11:5-9) என்று கேட்கின்றனர். அதற்கு யோபு, “இப்போதும் நீ மிருகங்களைக் கேட்டுப்பார், அவைகள் உனக்குப் போதிக்கும்; ஆகாயத்துப் பறவைகளைக் கேள். அவைகள் உனக்கு அறிவிக்கும்” (யோபு 12:7) என்று பதில் கூறுகிறார். கர்த்தர் தம் சிருஷ்டிப்புகளை உருவாக்கி, பராமரித்து, ஆளுகை செய்வதை விலங்குகள் பறைசாற்றுகின்றன: “சகல பிராணிகளின் ஜீவனும், மாம்சமான சகல மனுஷரின் ஆவியும் அவர் கையிலிருக்கிறது” (வச. 10).

நமது சூழ்நிலைகள் புரியாதபோதும். பரமபிதா பறவைகளைப் பராமரிப்பதால், உங்களையும், என்னையும் நேசிக்கிறார், பராமரிக்கிறார் என்று உறுதிகொள்ளலாம். உங்களைச் சுற்றிப்பார்த்து, அவரைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.