தண்ணீர், மின்சாரம் போன்றவற்றிற்கான பயன்பாட்டு கட்டணங்கள் சில சமயங்களில் ஆச்சரியப்படும் அளவிற்கு மிக அதிகமாக இருக்கும். ஆனால் வடக்கு கரோலினாவைச் சேர்ந்த கியரன் ஹீலிக்கு வந்த தண்ணீர் கட்டணம் இதயத்துடிப்பே நின்றுவிடும்படி இருந்தது. அவர் 1,000 கோடி டாலர் செலுத்த வேண்டும் என்று அவருக்கு வந்த செய்தி கூறியது! அந்த அளவிற்கு தண்ணீரை முந்திய மாதத்தில் பயன்படுத்தவில்லை என்பதை ஹீலி அறிந்ததால், கட்டணத்தைத் தவணை முறையில் கட்டலாமா என்று விளையாட்டாகக் கேட்டார்.  

1,000 கோடி டாலர் கடன் என்பது தாங்க முடியாத பாரம். ஆனால் நம் பாவங்களினால் நாம் சுமக்கவேண்டிய உண்மையான, அளவுக்கதிகமான பாரங்களோடு ஒப்பிடும்போது அது மிகவும் சாதாரணமானது. நமது பாவத்தின் பாரங்களையும், அவற்றின் பின் விளைவுகளையும் நாமே சுமக்க முயற்சிக்கும்போது, அது நமக்கு சோர்வை ஏற்படுத்தி, நம்மை குற்ற உணர்வாலும், அவமானத்தாலும் நிறைக்கிறது. நம்மால் அந்த பாரத்தை சுமக்க முடியாது என்பதே உண்மை.  

நாமே அந்த பாரங்களை சுமக்க வேண்டியதில்லை. பேதுரு விசுவாசிகளுக்கு நினைவுபடுத்தியதுபோல, தேவனின் குமாரனாகிய குற்றமில்லாத இயேசு மட்டுமே நமது பாவங்களின் பாரங்களையும் அதன் பின் விளைவுகளையும் சுமக்க முடியும் (1 பேதுரு 2:24). இயேசு சிலுவையில் மரித்தபோது, நமது தவறுகளை தன்மீது ஏற்றுக்கொண்டு, நமக்கு மன்னிப்பை அருளினார். அவர் நமது பாரங்களை சுமந்ததினால், நாம் அனுபவிக்க வேண்டிய தண்டனைகளைப் பெறவேண்டியதில்லை.  

“முன்னோர்களால் பாரம்பரியமாய் அனுசரித்து வந்த வீணான நடத்தையில்” (1:18), பயத்தோடும், குற்ற உணர்வோடும் வாழ்வதைத் தவிர்த்து, அன்பும், சுதந்திரமும் கொண்ட புது வாழ்வை நாம் வாழ முடியும் (வச. 22-23).