சால்மன் மீன் பிடிக்கும் ஒரு குழுவைப் பற்றிய ஒரு கதை உண்டு. மீன் பிடிப்பதற்காக நாள் முழுதும் செலவழித்துவிட்டு, ஒரு ஸ்காட்லாந்து விடுதியில் கூடி இருந்தார்கள். அந்தக் குழுவில் ஒருவர் தான் பிடித்த மீனைப் பற்றிக் கூறும்போது, கையை ஆட்டிப் பேசியதில், ஒரு கண்ணாடிக் குவளை சுவரில் பட்டு நொறுங்கி, வெள்ளைச் சுவரில் கறையை ஏற்படுத்தியது. அந்த மனிதர் விடுதிக் காப்பாளரிடம் மன்னிப்புக் கேட்டதோடு, தான் ஏற்படுத்திய சேதத்திற்கு பணம் செலுத்துவதாகக் கூறினார். ஆனாலும் சேதமடைந்த அந்தச் சுவரை அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அருகில் உட்கார்ந்திருந்த ஒருவர் “கவலைப் படவேண்டாம்” என்று சொல்லி, எழுந்து வந்து, தன்னிடமிருந்த ஒரு தூரிகையால், அந்த கறையைச் சுற்றி வரைய ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் அந்தக் கறை ஒரு கலைமானாக மாறி இருந்தது. அந்த மனிதர் விலங்குகளை அழகாகப் படம் வரையக்கூடிய ஸ்காட்லாந்தைச் சேர்ந்த
சர் இ. ஹெச். லேண்ட்ஸியர்.

சங்கீதம் 51ஐ எழுதிய, இஸ்ரவேலின் மிகச் சிறந்த இராஜாவான தாவீது, தன்னுடைய பாவங்கள் காரணமாக, தன் மீதும், தன் இராஜ்யத்தின் மீதும் அவமானத்தை வரப்பண்ணினான். தன்னுடைய நண்பர்களில் ஒருவனின் மனைவியை அபகரித்ததோடு, அந்த நண்பன் மரணம் அடையும்படி செய்தான். இந்த இரண்டு செயல்களுக்குமே மரணம்தான் தண்டனை. அவன் வாழ்க்கையே பாழானதாகத் தோன்றியது. ஆனால் அவன் தேவனிடம் மன்றாடினான்: “உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்” (வச. 12).

தாவீதைப் போல, நாமும் கடந்த காலத்தில் ஏதோ அவமானமான செயல்களைச் செய்திருக்கலாம். அந்த நினைவுகள் நம்மைத் துரத்தி, இரவில் நம்மை தூக்கம் இழக்கச் செய்யலாம். நாம் செய்த காரியங்களை அழிக்க முடியாதா அல்லது சரியாக மீண்டும் செய்ய முடியாதா என்று நினைக்கலாம். 

ஆனால் தேவனின் கிருபை நம் பாவங்களை மன்னிப்பதோடு, அவற்றின்மூலம் நம்மை முன்பை விட நல்லபடியாக மாற்றக்கூடியது. தேவன் எதையுமே வீண் செய்வதில்லை.