எனக்கு கசப்பான சாக்லெட் பிடிக்கும் என்பதால், ஒரு முறை “கசப்பான அடர் நிற சாக்லெட் நல்லதா” என்று இணையத்தில் தேடினேன். பல வகையான பதில்கள் கிடைத்தன – அவற்றில் சில நல்ல பதில்கள், சில மோசமான பதில்கள். எந்த விதமான உணவு பதார்த்தத்துக்கும் இது போல் நம்மால்  இணையத்தில் தேடமுடியும். பால் உங்களுக்கு நல்லதா? காஃபீ உங்களுக்கு நல்லதா? சாதம் நல்லதா? இது போன்ற கேள்விகளுக்கு தலைசுற்றும் அளவுக்கு பதில்கள் குவிந்து கிடக்கின்றன. அதனால் இப்படித் தேடுவதே உங்களுக்கு நல்லதா என்று நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அது தலைவலியை வரவழைக்கக்கூடும்!

ஆனால் உங்களுக்கு 100 சதவீதம் நல்லதை எதையாவது தேடுகிறீர்கள் என்றால், நான் பரிசுத்த வேதாகமத்தை உங்களுக்குப் பரிந்துரை செய்வேன். தேவனுடன் நல்ல உறவை ஏற்படுத்த விரும்பும், கிறிஸ்துவைப் பின்பற்றும் மக்களுக்கு அது என்ன செய்ய முடியும் என்பதைப் பாருங்கள்.

          நீங்கள் பரிசுத்தமாய் இருக்க உதவும் (சங். 119:9, 11).

         உங்களை ஆசீர்வதிக்கும் (லூக். 11:28).

          உங்களை ஞானமுள்ளவர்களாக மாற்றும் (மத். 7:24).

          ஒளியையும், புரிந்துகொள்ளுதலையும் தரும் (சங். 119:130).

          நீங்கள் ஆவியில் வளர உதவும் (I பேது. 2:2).

நம் ஆண்டவர் நல்லவர். “கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர்” என்று சங்கீதம் 145:9 கூறுகிறது. அந்த தயவால், அவரை நேசிக்கும் அனைவரும் கர்த்தர்வுடன் உள்ள உறவை மேம்படுத்துவதற்கு உதவ, நமக்கு ஒரு வழிகாட்டியைக் கொடுத்துள்ளார். தேர்ந்தெடுக்க அநேக விஷயங்கள் இந்த உலகில் இருக்கும்போது, அவற்றில் சரியானதைத் தேர்ந்தெடுத்து நாம் வாழ முயற்சிக்கும்போது, நமக்கு எது நல்லது என்று வேதாகமத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதற்காக அவரைத் துதிப்போம். சங்கீதக்காரரோடு சேர்ந்து “உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்” (சங். 119: 103) என்று நாமும் சொல்லுவோம்.