ஊழியத்திற்காக இளைஞர்களுடன் ஒரு பயணத்துக்குத் தயார் செய்து கொண்டிருந்தபோது, “அங்கே வை—ஃபை (Wi-Fi)இருக்குமா” என்ற கேள்வியை அநேக முறை என்னிடம் கேட்டார்கள். இருக்கும் என்று அவர்களுக்கு நான் உறுதி அளித்தேன். ஒரு நாள் இரவு வை—ஃபை இணைப்பு இல்லாதபோது, அந்த இளைஞர்கள் அதிகமாகப் புலம்பினார்கள்.

நம்மில் பலர் நம் கையில் நம் ஸ்மார்ட் ஃபோன் (smart phone)இல்லாதபோது, எதையோ இழந்துவிட்டதைப் போல பரிதவிக்கிறோம். அவை நம் கையில் இருக்கும்போது, நம் கண்கள் அதன் திரையை விட்டு விலகுவதில்லை.

எல்லாவற்றையும்போல, இணையமும், அதன் மூலம் நாம் பெற்றுக் கொள்ளக்கூடிய விஷயங்களும் நமது கவனத்தை திசை திருப்புவதாக இருக்கலாம் அல்லது நமக்கு ஆசீர்வாதமாக இருக்கலாம். இந்த இரண்டில் எது என்பது, அதிலிருந்து பெறும் தகவல்களை நாம் எப்படி உபயோகிக்கிறோம் என்பதைப் பொறுத்தது. நீதிமொழிகளில் “புத்திமானுடைய மனம் அறிவைத் தேடும்; மூடரின் வாயோ மதியீனத்தை மேயும்” (15:14) என்று வாசிக்கிறோம்.

வேதாகம ஞான போதனைகளை நம் வாழ்க்கைக்கு நாம் பயன்படுத்தும்போது, நம்மை நாமே சில கேள்விகளைக் கேட்டுக்கொள்ள முடியும்.சமூக இணையதளங்களையும், அதன்மூலம் நாம் இணைந்திருக்கும் குழுக்களின் செய்திகளையும் தினமும் கட்டாயம் பார்க்கிறோமா? எந்த விதமான விஷயங்களில் நாம் ஆர்வம் செலுத்துகிறோம் என்பதை அது சுட்டிக் காட்டுகிறதா? நாம் இணையத்தில் படிக்கும், பார்க்கும் விஷயங்கள் விவேகமான வாழ்க்கை வாழ நம்மை ஊக்குவிக்கிறதா (வச. 16-21); அல்லது – புறங்கூறுதல், அவதூறான விஷயங்கள், உலகப்பிரகாரமான செல்வங்கள், தவறான பாலியல் சிந்தனைகள் – போன்ற மதியீனமான காரியங்களைத் தேடுகிறோமா?

பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும்போது, “உண்மையுள்ள, ஒழுக்கமுள்ள, நீதியுள்ள, கற்புள்ள, அன்புள்ள, நற்கீர்த்தியுள்ள” (பிலிப்பியர் 4:8) விஷயங்களால் நம் சிந்தனைகளை நிரப்ப முடியும். கர்த்தர் தரும் ஞானத்தால், அவரைக் கனப்படுத்தக்கூடிய நல்ல விஷயங்களை நாம் தேர்ந்தெடுக்க முடியும்.