தொடர்ந்து வலியினால் போராடிக் கொண்டிருக்கும்போதும், ஒரு சிறிய அசைவு கூட எதிரியின் கடுமையான தாக்குதல் போன்று வேதனையைத் தரும் போதும், நான் தொடர்ந்து தேவன் மீதுள்ள நம்பிக்கையை விடவில்லை. பிரச்சனை ஒன்று, என்னை வலதுபுறம் குத்துகிறது, பிரச்சனை இரண்டு என்னைப் பின்னாலிருந்து தள்ளுகிறது. பிரச்சனை மூன்று என் மூக்கை; குத்துகிறது. இப்படியே எனது பெலன் குன்றிய போது, எங்காகிலும் ஓடி ஒளிந்து கொள்வதே மேலாகத் தோன்றியது. ஆனாலும் என்னுடைய சூழலை மாற்றுவதோ அல்லது என் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதோ, இவையெதுவுமே என்னை வலியிலிருந்து தப்புவிக்கக் கூடாதிருந்தமையால் மெதுவாக தேவனைச் சார்ந்து வாழக் கற்றுக் கொண்டேன்.

எனக்கு ஊக்கமும், ஆறுதலும், தைரியமும் தேவைப்பட்டபோது, நான் ஜெபத்தோடு சங்கீதங்களை வாசிக்க ஆரம்பித்தேன். சங்கீதக்காரன் உண்மையாய்த் தன்னுடைய நிலைமையை தேவனிடம் சமர்ப்பிக்கின்றார். தாவீது ராஜா, தன்னுடைய மகன் அப்சலோம் தன்னைக் கொன்று விட்டு
ராஜ்ஜிய பாரத்தைக் கைப்பற்ற முயற்சித்தபோது, அவனிடமிருந்து ஓடி வந்தபோது பாடிய சங்கீதம் எனக்கு மிகவும் விருப்பமானது. தாவீது தன்னுடைய வேதனை நிறைந்த சூழலைப்பற்றி புலம்பியிருந்தாலும் (சங். 3:1-2) அவர் தேவனை நம்பி, அவருடைய பாதுகாப்பை நம்பி வந்து, தன்னுடைய ஜெபத்திற்கு பதிலளிக்குமாறு கேட்கின்றார். (வச. 3-4) தனக்கு என்ன நடக்குமோ என்று பயந்து அல்லது வருந்தி அவர் தன் நித்திரையை இழக்கவில்லை. ஏனெனில் அவர், தேவன் தன்னைப் பாதுகாத்து வழி நடத்துவார் என நம்பினார் (வச. 5-8).

உடல், மனரீதியான வேதனைகள் எதிரியைப் போன்று நம்மைத் தாக்கலாம். நாம் சோர்ந்து போய், இந்தப் போராட்டத்தின் முடிவு என்னவாகும் என்று தெரியாமல் கைவிட்டு விடவும் அல்லது அங்கிருந்து தப்பி விடவும் எண்ணலாம். ஆனால் தாவீதைப் போன்று தேவன் நம்மைத் தூக்கி விடுவார், அவருடைய மாறாத அன்பிற்குள்ளும், பிரசன்னத்திற்குள்ளும் நம்மை இளைப்பாறச் செய்வார் என்று தேவனை நம்பக் கற்றுக் கொள்வோம்.