பயங்கர புயல்காற்று, மிரட்டும் மின்னல், மோதியடிக்கும் அலைகள். சாவின் விளிம்பை தொட்டுவிட்ட உணர்வு. தாத்தாவுடன் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற நான் அங்கேயே நெடுநேரம் தங்கிவிட்டேன். மாலையில் சூரியன் மறைந்ததும் வீசின சூரைக்காற்றினால் எங்கள் படகு பயங்கரமாய் தத்தளித்தது. படகு கவிழாமல் இருக்க அதன் முன்பகுதியில் உட்காரவேண்டும் என்று தாத்தா அறிவுறுத்தினார். திகில் உள்ளத்தை கவ்வியது. ஆனாலும், எப்படியோ, நான் ஜெபிக்க ஆரம்பித்தேன். எனக்கு வயது பதினான்கு.

தேவனுடைய ஆறுதலையும் பாதுகாப்பையும் வேண்டினேன். புயல் ஓய்ந்தபாடில்லை, ஆனாலும் நாங்கள் எப்படியோ தப்பி கரையேறினோம். அன்றைக்கு அந்த இரவு புயலில் உணர்ந்த தேவபிரசன்னத்தின் நிச்சயத்தை இன்னொருமுறை உணர்ந்தேனா என்று தெரியவில்லை.

புயல்கள் இயேசுவுக்கு புதியவைகள் அல்ல. மாற்கு 4:35-41 வசனங்களில் இயேசு தம்முடைய சீடர்களைப் பார்த்து, இன்னும் சற்றுநேரத்தில் பயங்கர புயல் வீசப்போகும் ஒரு ஏரியை கடந்துபோகச் சொன்னார். அன்றைக்கு இரவு வீசின கோரப்புயல் அந்த முரட்டு மீனவர்களை ஒரு கை பார்த்தது. தாங்கள் சாகப்போகிறோம் என்றே நினைத்தார்கள். ஆனாலும் இயேசு கடலை அமரச்செய்து தம்முடைய சீடர்களை ஆழமான விசுவாச அனுபவத்திற்கு நேராக நடத்தினார்.

அதேபோல்தான் நம்முடைய புயல்களின் நடுவே அவரை நம்பும்படிக்கு அவர் நம்மை அழைக்கிறார். சில சமயங்களில் அவர் அற்புதமாய் காற்றையும், அலைகளையும் அமைதிப்படுத்துகிறார். சில வேளைகளில் அதற்கு இணையான இன்னொரு அற்புதத்தையும் நிகழ்த்துகிறார்: நம்முடைய இருதயங்களை ஸ்திரப்படுத்தி அவரை நம்பத் துணைபுரிகிறார். “இரையாதே! அமைதலாயிரு” என்று அலைகளை பார்த்து கட்டளையிடக்கூடிய வல்லமை தம்மிடமுண்டு என்பதை நாம் விசுவாசித்து பலப்படவேண்டும் என்று விரும்புகிறார்.