நான் உயர்நிலைப்பள்ளியில் பயின்ற போது, வாள் சண்டை பயிற்சி எடுத்துக் கொண்டேன். என்னுடைய பயிற்சியாளர் எனக்கெதிராக வரும் அசைவுகளுக்குகந்த பாதுகாப்பு நிலையை கத்திச் சொல்வார் (பாரி). அவர் தன்னுடைய கருவியை நீட்டி அந்த தாக்குதலை எதிர்க்கும்படி கத்திச் சொல்லும்போது நான் அதனை கவனித்து உடனடியாகச் செயல்பட வேண்டும்.

இப்படி கவனித்து, உடனடியாகச் செயல்படுகின்ற மனதை, உடனடி கீழ்ப்படிதலை, வேதாகமம் பாலியல் சோதனைகள் வரும்போது பயன்படுத்தச் சொல்லுகிறது 1 கொரி. 6:18ல் பவுல் விசுவாசிகளுக்கு, வேசிகளிடமிருந்து விலகியிருக்கும்படி போதித்து வேசித்தனத்துக்கு விலகியோடுங்கள் என்று குறிப்பிடுகிறார். சில வேளைகளில் நாமும் சவால் நிறைந்த சந்தர்ப்பங்களில் “உறுதியாக நிற்கும்படி” அறிவுறுத்தப்படுகிறோம் (கலா. 5:1, எபே. 6:11). நம்மைப் பாதுகாத்துக் கொள்ள சிறந்த வழியாக, வேதாகமம் “விலகி ஓடு” என வலியுறுத்திக் கூறுகிறது.

உடனடி செயல் நம்மை சமரசம் செய்து கொள்வதிலிருந்து காத்துக் கொள்கிறது. சிறிய சமரசங்கள் பேரழிவை உண்டாக்கும் தோல்விகளுக்கு வழி வகுக்கும். ஒரு கட்டுப்படுத்த முடியாத சிந்தனை, வலைதளங்களில் தவறான இடத்திற்குச் செல்லும் பார்வை, திருமணமான பின்பும் நண்பர்களோடு சுற்றுதல் ஆகிய இவைகள் நாம் செல்லக் கூடாத வழிகளுக்கு நம்மை இழுத்துச் சென்று, நம்மை தேவனை விட்டுப் பிரிக்கின்றன.

நாம் சபலங்களுக்கு விலகியோடும் போது நாம் ஓடிச் சேர, தேவன் ஓர் இடத்தைத் தருகிறார். நம்முடைய பாவங்களுக்காக இயேசு சிலுவையில் தம்மையே பலியாக்கினதின் மூலம், அவர் நமக்கு நம்பிக்கையையும், மன்னிப்பையும், புதிய துவக்கத்தையும் தருகிறார். நாம் எங்கிருந்தாலும், என்ன செய்திருந்தாலும் அவர் நம்மை ஏற்றுக் கொள்கிறார். நம் பெலவீனங்களில், நாம் இயேசுவிடம் செல்லும்போது அவர் நம்மை விடுவித்து அவருடைய பெலத்தினால் வாழ வழி வகுக்கிறார்.