கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த பின்னர், எனக்கு குறைந்த சம்பளத்தில் ஒரு வேலை கிடைத்தது. சம்பளம் மிகக் குறைவாகவே இருந்ததால், சில வேளைகளில் அடுத்த வேளை உணவுக்குக்கூட போதிய பணமில்லாதிருந்தேன். என்னுடைய அனுதின தேவைகளுக்கு தேவனை நம்பி வாழக் கற்றுக் கொண்டேன்.

இது எனக்கு தீர்க்கதரிசி எலியாவின் அனுபவத்தை நினைவுபடுத்துகிறது. அவருடைய தீர்க்கதரிசன ஊழியத்தில் அவரும் தன்னுடைய அனுதின தேவைகளைச் சந்திப்பதற்கு தேவனை நம்பியிருந்தார். இஸ்ரவேல் தேசத்தில் ஒரு பஞ்சத்தை தேவன் கட்டளையிடுவார் என தீர்க்கதரிசனம் உரைத்த சில நாட்களில், தேவன் அவரை ஒரு வனாந்திரத்திற்கு அனுப்பினார். அங்கு கேரீத் ஆற்றண்டையில் தங்கியிருந்தார். அங்கு தேவன் காகங்கள் மூலம் எலியாவுக்கு அனுதின உணவைக் கொடுத்தார். அந்த ஆற்றின் நீரைப் பருகிக் கொண்டார் (1 இரா. 17:1-4).

ஆனால் அங்கும் வறட்சி ஏற்பட்டது. அந்த ஆற்று நீர் குறுகி சிறிய ஓடையாக மாறியது. பின்னர் அதுவும் வற்றிப் போனது. அந்த ஓடை நீர் வற்றிப் போன பின்பு தேவன் எலியாவிடம், நீ எழுந்து சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய் அங்கே தங்கியிரு. உன்னை பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்கு கட்டளையிட்டேன் என்றார் (வச. 9). சாறிபாத் என்ற ஊர் பெனிக்கியா நாட்டிலுள்ளது. அங்குள்ள ஜனங்கள் இஸ்ரவேலரின் எதிரிகள். இங்கு யாராகிலும் எலியாவுக்கு அடைக்கலம் கொடுப்பார்களா? அதிலும் ஓர் ஏழை விதவையிடம் பகிர்ந்தளிக்க என்ன உணவு இருக்கும்?

நம்மில் அநேகர் எதிர்பார்ப்பது, தேவன் நம்முடைய வளங்களெல்லாம் தீர்ந்து போகுமுன்னரே, ஏராளமாக நாளின் தேவைகளுக்கு போதுமானதாகத் தரவேண்டும். நம்முடைய அன்புத் தந்தை நம்மிடம் என்னை நம்பு என மென்மையாகக் கூறுகின்றார். அவர் காகங்களையும், ஒரு விதவையையும் எலியாவை போஷிக்க பயன்படுத்தியதைப் போன்று, தேவனால் கூடாதது ஒன்றுமில்லை. நாம் நம்முடைய அனுதின தேவைகளுக்கு அவரின் அன்பினையும், அவருடைய வல்லமையையும் சார்ந்திருப்போம்.