1982ஆம் ஆண்டு ஒரு உணவகத்திலுள்ள தட்டை வைக்கும் சிறு மேஜை விரிப்பில் “திட்டமிடாத இரக்கச் செயல்களையும், காரணமற்ற அழகிய செயல்களையும் செய்யப் பழகுங்கள்” என அமெரிக்க எழுத்தாளராகிய ஆனி ஹெர்பட் (Anne Herbert) கிறுக்கியதாக சிலர் கூறுவார்கள். இக்கருத்து சினிமா மற்றும் இலக்கிய படைப்புகளின் மூலம் பிரபலமாக்கப்பட்டு இன்று நம் சொல் அகராதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.

இப்பொழுது கேள்வி என்னவெனில், “ஏன்?” ஏன் நாம் இரக்கம் பாராட்ட வேண்டும்? இயேசுவை பின்பற்றுகிறவர்களுக்கு, பதில் தெளிவாய் உள்ளது. அதாவது, தேவனுடைய அன்பையும், இரக்கத்தையும் வெளிப்படுத்தவே.

இந்த நியமத்திற்கேற்ற ஒரு உதாரணத்தை பழைய ஏற்பாட்டில் மோவாபியப் பெண்ணாகிய ரூத்தினுடைய கதையிலே காணலாம். அவள் அந்நிய தேசத்தை சேர்ந்தவள். ஆகையால் இத்தேசத்தின் மொழியையும், கலாச்சாரத்தையும் அவள் அறிந்திருக்கவில்லை. அதுமட்டுமின்றி, அவள் மோசமான வறுமையில் இருந்தபடியினால், அவளைக் கவனியாமல் அசட்டை செய்த ஜனத்தின் உதவியையே முழுமையாக எதிர்பார்த்திருந்தாள்.

ஆனால், அந்த இஸ்ரவேலரில் ஒருவன் அவளுக்கு கிருபை பாராட்டி அவளுடைய இருதயத்தோடே பேசினான் (ரூத் 2:13). தன்னுடைய வயல்களில் அறுவடைக்கும் பின் மீதமுள்ள தானியங்களை அவள் எடுத்துக்கொள்ள அனுமதித்தான். ஆனால் சாதாரண உதவியைக் காட்டிலும், தன்னுடைய இரக்கத்தின் மூலம், செட்டைகளை விரித்து அடைக்கலம் அளிக்கும் கனிவான இரக்கத்தையும், அன்பான கிருபையையும் உடைய தேவனை வெளிப்படுத்தினான். பின்பு அவள் போவாஸின் மனைவியாக தேவனுடைய குடும்பத்தில் அங்கத்தினராகி, உலக இரட்சகராகிய இயேசு பிறந்த வம்சாவளியின் முன்னோர்களில் ஒருவர் ஆனாள் (மத். 1:1-16).

இயேசுவின் நாமத்தினாலே நாம் செய்யும் ஒரு இரக்கமுள்ள செயல் என்ன விளைவை விளைவிக்கும் என நமக்கு தெரியாது.