ஒரு எழுத்தாளராக என்னுடைய படைப்புகள் பெரும்பாலும் வலியின் வேதனையை சுற்றியே இருந்துள்ளன. பல நாட்களாகியும் ஆறாத புண்ணை நகத்தால் சுரண்ட நினைப்பது போல, மறுபடியும் மறுபடியும் நான் அதே கேள்விகளுக்கு திரும்புவேன். என்னுடைய புத்தகங்களை படிக்கும் வாசகர்கள் அவர்களுடைய கடுந்துயரமான கதையை பகிர்ந்து கொள்ளும்பொழுது, அவர்களுடைய முகங்கள் என் சந்தேகங்களுக்கு உருவம் கொடுத்துவிடும். வாலிபர் மத்தியில் ஊழியம் செய்யும் போதகர், எய்ட்ஸ் (AIDS) நோயினால் பாதிக்கப்பட்டவருடைய இரத்தத்தை சரியாக பரிசோதிக்காமல் தன் மனைவிக்கும், குழந்தைக்கும் செலுத்தியதால் மரணத்தை நோக்கி அவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டவுடன் என்னை தொலைபேசியில் அழைத்து, “இனி ஒரு ‘அன்பான தேவனைக்’ குறித்து என் வாலிபர் குழுவிடம் நான் எப்படி பேச முடியும்?” எனக் கேள்வி எழுப்பினார்.

இப்படிப் பட்டதான ‘ஏன்’ என்ற கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சிகூட செய்யக்கூடாது என்பதை நான் கற்றுக்கொண்டேன். மாசுள்ள அந்த இரத்தம் எதற்காக அப்போதகரின் மனைவிக்கு செலுத்தப்பட வேண்டும்? ஏன் ஒரு சுழற்காற்று ஒரு ஊரை தாக்கிவிட்டு இன்னொரு ஊரை தாக்காமல் செல்கிறது? ஏன் சரீர சுகத்திற்காக ஏறெடுக்கப்படும் எல்லா ஜெபங்களுக்கும் பதில் கிடைப்பதில்லை?

இப்படி அநேக கேள்விகள் இருப்பினும், “தேவனுக்கு நம்மீது அக்கறை உண்டா?” என்ற கேள்வி மாத்திரம் இனி ஒருபோதும் என்னை குடைவதில்லை. ஏனென்றால் வலியின் வேதனைகளினால் இப்பூமி குமுறும்பொழுது தேவனுடைய மன வேதனையை அவருடைய முகத்தை பார்த்து அறிந்து கொள்ளலாம். ஆம், தேவன் நமக்கு காட்டிய அவருடைய முகம், இயேசுவினுடைய முகமே.

தேவனுடைய குமாரனாகிய இயேசு நமக்காக மரணத்தை ருசித்ததினால் வலி, வேதனைகள், துன்பங்கள் மற்றும் மரணமும் நித்தியத்திற்கும் இறுதியாக அழிக்கப் பட்டதினால், “தேவனுக்கு நம்மீது அக்கறை உண்டா?” என்கிற கேள்விக்கு பதில் கிடைத்தாயிற்று. “இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்” (2 கொரி. 4:6).