சினிமாவில் இசையைக் கேட்பதில் ஒரு புதிய தொழில் நுட்பத்தை வால்ட் டிஸ்னி நிறுவனம் (Walt Disney Studios) அறிமுகம் செய்தது. அது எத்திசையிலும் எழும்பும் ஒலி அல்லது சூழ் ஒலி (Stereophonic sound) என கூறலாம். சினிமா பார்ப்பவர்கள் இசையை ஒரு புதிய வகையில் கேட்டு ரசிக்க தயாரிப்பாளர்கள் விரும்பியதால், இது உருவாக்கப்பட்டது.

ஆனால் “சுற்றும் சூழ்ந்த ஒலியை” பயன்படுத்துவது இது முதல் முறை அல்ல. ஏனெனில் பல 1000 வருடங்களுக்கு முன்பு மறுபடியும் கட்டி எழுப்பிய எருசலேமின் மதில் சுவரை பிரதிஷ்டை செய்யும் பொழுது, இந்த முறையை நெகேமியா அறிமுகம் செய்தார். “அப்பொழுது நான் யூதாவின் பிரபுக்களை அலங்கத்தின்மேல் ஏறப்பண்ணி, துதிசெய்து நடந்துபோகும்படி இரண்டு பெரிய கூட்டத்தாரை நிறுத்தினேன்” (நெகே. 12:31) என்று அவர் விவரிக்கிறார். மதில் சுவரின் தென் பகுதியில் உள்ள குப்பை மேட்டு வாசலில் தொடங்கி, இரண்டு பாடற்குழுவினரும் இடதுபுறமும், வலதுபுறமுமாக பிரிந்து, துதியோடு எருசலேமைச் சுற்றி ஆலயத்தை வந்தடைந்தார்கள் (வச. 31, 37-40).

பாடகற் குழுவினர் ஜனத்தை மிகுதியான சந்தோஷத்திற்குள் நடத்திச் சென்றனர். ஏனெனில், “தேவன் தங்களுக்கு மகா சந்தோஷத்தை உண்டாக்கினதினால் மகிழ்ச்சியாயிருந்தார்கள்” (வச. 43).

அவர்களுடைய கொண்டாட்டம், “தூரத்திலே கேட்கப்பட்டது,” சன்பலாத் போன்ற எதிரிகளின் எதிர்ப்பை மேற்கொண்டு, மறுபடியும் மதில் சுவரைக் கட்ட தேவன் செய்த உதவியை எண்ணி அவர்கள் துதி செலுத்தினார்கள். நம்முடைய மகிழ்ச்சி துதியாகப் புரண்டு வரும்படி தேவன் நமக்கு என்ன செய்தார்? நம் வாழ்வில் தேவனுடைய தெளிவான வழிகாட்டுதலா? அல்லது நம்முடைய துயர நேரத்தில் அவர் மட்டுமே அளிக்கக்கூடிய ஆறுதலா? அல்லது நம்முடைய தலைசிறந்த ஈவாகிய இரட்சிப்பா?

ஒருவேளை நம்மால் “சுற்றும் சூழ்ந்த சத்தத்தை” நம் துதியின் மூலம் உண்டாக்க முடியாமல் போகலாம். ஆனால், தேவன் நமக்கு அளித்த “மகிழ்ச்சியில்” களிகூரலாம். அப்படி செய்யும் பொழுது, பிறர் நம்முடைய துதியை கேட்டு, நம்முடைய வாழ்வில் தேவன் எவ்வாறு கிரியை செய்கிறார் என்பதை அறிந்துக் கொள்வார்கள். !