1960ம் ஆண்டுகள் பொதுவாக ஒழுக்கநெறிகளை எதிர்க்கும் மனப்பான்மை உடைய காலமாக இருந்தது. நான் அந்தக்காலத்தில் வளர்ந்து வந்தபடியால், நானும் மதசம்பந்தமான காரியங்களை புறக்கணித்தேன். என் வாழ்நாள் முழுவதும் ஆலயத்திற்கு சென்று வந்திருக்கிறேன். ஆனால், நான் 20 வயது கடந்த காலகட்டத்தில், ஒரு பயங்கரமான விபத்தை சந்தித்த பின்புதான் விசுவாசத்திற்குள் வந்தேன். அப்பொழுதிலிருந்து எனது நடுத்தர வயதினை, மனிதராகிய நம்மிடம், இயேசு காண்பித்த அன்பினைப்பற்றி பிறருக்கு அறிவித்து வருவதில் செலவிட்டு வந்தேன். அது ஒரு பயணமாக இருந்து வருகிறது.

குறைபாடுகள் நிறைந்த இவ்வுலகில் வாழும் வாழ்க்கையை “பயணம்” என்ற சொல் குறிக்கிறது. பயணம் செய்யும்பொழுது வழியில், நாம், மலைகள், பள்ளத்தாக்குகள், ஆறுகள், சமவெளிகள், போக்குவரத்து நிறைந்த நெடுஞ்சாலைகள், ஆள் அரவமற்ற அமைதியான சாலைகள் – உயர்வுகள், தாழ்வுகள், மகிழ்ச்சிகள், துக்கங்கள், போராட்டங்கள், இழப்புகள், நொறுங்கின இருதயம், தனிமை ஆகியவைகளை சந்திக்கின்றோம். நமக்கு முன்னால் உள்ள பாதையை நம்மால் பார்க்க இயலாது. நாம் விரும்புகிறபடி அப்பாதை அமையாவிட்டாலும் அது இருக்கிறவண்ணமாகவே அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் ஒருபொழுதும் இப்பயணத்தை தனிமையாக சந்திப்பது இல்லை. தேவனுடைய பிரசன்னம் நம்மோடு கூட எப்பொழுதும் இருப்பதை வேதாகமம் நமக்கு நினைப்பூட்டுகிறது. தேவன் இல்லாத இடமே கிடையாது (சங். 139:7-12). அவர் நம்மை விட்டு விலகுவதுமில்லை, கைவிடுவதுமில்லை (உபா. 31:6; எபி. 13:5). அவர் போனபின்பு பரிசுத்தாவியை அனுப்புவேன் என்று இயேசு அவருடைய சீஷர்களுக்கு வாக்களித்து, “நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்” (யோவா. 14:18) என்று கூறினார்.

நாம் நமது பயணத்தில் சந்திக்கும் சவால்களையும், வாய்ப்புகளையும் மன உறுதியோடு சந்திக்கலாம். ஏனெனில், நம்மை ஒருபொழுதும் கைவிடாமல், நம்மோடுகூட எப்பொழுதும் இருப்பேன் என்று தேவன் வாக்களித்துள்ளார்.