நான் வாழ்ந்து வந்த நகரில் வசித்து வந்த ஆலன் நானிங்கா என்ற நபர் இறந்தபொழுது, அவரைப்பற்றி வெளியான இரங்கல் செய்தி மூலம், எனது ஊரில் வாழ்ந்து வந்த அனைத்துக் கிறிஸ்தவர்களைவிட அவர் “மிகவும் அர்ப்பணிப்புடன் கிறிஸ்துவுக்கு சாட்சியாக வாழ்ந்தவர்” என்ற செய்தி எல்லாராலும் அறியப்பட்டது. அந்த இரங்கல் செய்தியில் அவரது குடும்பம், அவர் செய்து வந்த வேலை ஆகியவற்றைப் பற்றிக் கூறினபின், அவருடைய உடல்நிலை 10 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்பட்டிருந்ததையும் விளக்கினது. அவர் மருத்துவமனையில் இருந்தபொழுது, அங்கிருந்த உள்நோயாளிகள் மத்தியில் அர்ப்பணிப்புடன் செய்து வந்த ஜெப ஊழியத்தின் நிமித்தமாக “ஜெபிக்கும் நோயாளி” என்ற சிறப்புப் பட்டத்தை பெற்றார் என்ற விளக்கத்துடன் அந்த இரங்கல் செய்தி முடிவடைந்திருந்தது. அவரது நோயின் வேதனைகள் மத்தியிலும் அவரைச் சுற்றியிருந்த தேவையுள்ள மக்களுக்காக ஜெபித்து வந்த ஒரு மனிதனை இங்கு பார்க்கிறோம்.

இயேசுவை, யூதாஸ் காட்டிக்கொடுப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக “நான் இனி உலகத்திலிரேன், இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள்; நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும்” (யோவா. 17:11) என்று இயேசு அவருடைய சீஷர்களுக்காக ஜெபித்தார். அவருக்கு நேரிடப்போவதை அவர் நன்கு அறிந்திருந்தும், அவர் தன்னைக் குறித்து சிந்திக்காமல், அவரைப் பின்பற்றின சீஷர்களைப்பற்றி அவரது கவனத்தை செலுத்தினார்.

நமது சுகவீனம், துன்பமான நேரங்கள் மத்தியில் பிறருடைய ஜெப உதவிக்காக ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். அந்த ஜெபங்கள் நம்மை ஊக்கப்படுத்த நமக்கு மிகவும் உதவியாக உள்ளன. ஆனால், நாமும் நம்முடைய கர்த்தரைப்போல நம்மைச் சுற்றியுள்ள, உதவி தேவைப்படும் மக்களுக்காக, தேவனை நோக்கி நமது கண்களை ஏறெடுத்து ஜெபிப்போமாக.