விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணை, மதத்தலைவர்கள் கூட்டம் ஒன்று அவளை மந்தையை ஓட்டி வருவது போல இயேசுவிடம் இழுத்து வரும் பொழுது, கல்லெறி தூரத்திலுள்ள கிருபைக்குள் அவளை அழைத்து வருகிறார்கள் என்பதை அறியாதிருந்தார்கள். இயேசுவை இழிவுபடுத்துவதே அவர்களுடைய எதிர்பார்ப்பாய் இருந்தது. ஒரு வேளை அவர் அவளை விட்டுவிடும்படி சொன்னால், மோசேயின் பிரமாணங்களை மீறுகிறதாய் குற்றம் சாட்டலாம் அல்லது அவளை ஆக்கினைக்குள்ளாக தீர்த்து மரணத்துக்கு ஒப்புக்கொடுத்தால், அவரை பின்பற்றும் கூட்டம் அவருடைய இரக்கமும், கிருபையும் நிறைந்த வார்த்தைகளை உதறிவிடுவார்கள்.

ஆனால் இயேசுவோ, குற்றம்சாட்டினவர்கள் எய்த அம்பை அவர்களிடமே திருப்பிவிட்டார். நேரடியாக பதிலளிப்பதற்கு பதில் அவர் தரையிலே எழுத ஆரம்பித்தார் என்று வேதம் கூறுகிறது. அவரை அம்மதத்தலைவர்கள் ஓயாமல் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்ததால், அவர்களில் பாவமே செய்யாதவன் முதல் கல்லை எறியுமாறு சொல்லிவிட்டு மீண்டும் தரையிலே எழுதத் தொடங்கினார். அடுத்த முறை அவர் நிமிர்ந்து பார்த்த பொழுது குற்றம் சாட்டின ஒருவரும் அங்கில்லை.

இப்பொழுது, அவள் மேல் கல்லெறிய தகுதியான அந்த பாவமற்ற ஒரே நபர் அவளைப் பார்த்து அவளுக்கு இரக்கமளித்தார். “நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே” என்றார் (யோவா. 8:11).

ஒரு வேளை இன்றைய தினத்தில் நீங்கள் மற்றவர்களை நியாயந்தீர்த்ததால், பாவமன்னிப்பை எதிர்பார்த்திருக்கிறீர்களோ அல்லது, அவருடைய கிருபைக்கு அப்பாற்பட்ட பாவம் எதுவும் இல்லை என்கிற நிச்சயத்தை எதிர்பார்த்திருந்தாலும் சரி, சோர்ந்து போகாதிருங்கள். ஏனெனில் இன்று ஒருவனும் உங்கள் மேல் கல்லெறியவில்லை. தேவனுடைய இரக்கத்தைப் பெற்றவர்களாய் மனம் மாறுங்கள். இதனால் ஆறுதல் அடையுங்கள்.