எனது மகன், 1 முதல் 10 வரை எண்ணுவதற்கு கற்றுக்கொண்டிருக்கிறான். அவனது பொம்மைகள், அவன் பார்க்கும் மரங்கள் அனைத்தையும் எண்ணுவான். அவனது பள்ளிக்குச் செல்லும் வழியில் எனது கவனத்திற்கு உட்படாத காட்டுப்பூக்கள் அல்லது எனது பாதத்திலுள்ள விரல்கள் ஆகியவற்றைக் கூட அவன் எண்ணுவான்.

இப்படியாக என் மகன் எண்ணுவதின் மூலம், நான் மறுபடியும் எண்ணுவதற்கு எனக்குப் போதிக்கிறான். நான் செய்து முடிக்காத காரியங்கள் அல்லது என்னிடம் இல்லாத பொருட்களைப் பற்றிய காரியங்களில் என் முழு கவனத்தையும் செலுத்துவதால், என்னைச் சுற்றியுள்ள அனைத்து நன்மையான காரியங்களையும் கவனிக்கத் தவறிவிடுகிறேன். இந்த ஆண்டில் எனக்குக் கிடைத்த புதிய சிநேகிதர்கள், பதில் கிடைத்த ஜெபங்கள், எனது நல்ல சிநேகிதருடன் நான் சிரித்து மகிழ்ந்த நேரங்கள் அனைத்தையும் மறந்து விட்டேன்.

ஒவ்வொரு நாளும் தேவன் அருளும் ஆசீர்வாதங்களை எண்ணுவதற்கு எனது பத்து விரல்கள் போதாது. “என் தேவனாகிய கர்த்தாவே, நீர் எங்கள் நிமித்தஞ்செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாயிருக்கிறது; ஒருவரும் அவைகளை உமக்கு விவரித்துச் சொல்லிமுடியாது. நான் அவைகளைச் சொல்லி அறிவிக்கவேண்டுமானால் அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள்” (சங். 40:5). இரட்சிப்பு, ஒப்புரவாதல், நித்திய ஜீவன் போன்ற ஆசீர்வாதங்களை நம்மால் எப்படி எண்ணுவதற்கு இயலும்?

நம்மீது தேவன் கொண்டுள்ள விலைமதிப்பற்ற எண்ணங்கள், அவர் நமக்குச் செய்த ஆசீர்வாதமான காரியங்கள் ஒவ்வொன்றாக எண்ணி நாமும் தாவீதோடு சேர்ந்து, “தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் தொகை எவ்வளவு அதிகம். அவைகளை நான் எண்ணப்போனால், மணலைப்பார்க்கிலும் அதிகமாம்; நான் விழிக்கும்போது இன்னும் உம்மண்டையில் இருக்கிறேன்” (சங். 139:17–18) என்று தேவனை போற்றித் துதிப்போம்.

எண்ணுவதற்கு மறுபடியும் கற்றுக்கொள்வோம்.