ஒரு அமெரிக்க உயர்நிலைப் பள்ளியிலுள்ள பாடகர் குழுவின் 25 வாலிபப் பெண்களில் ஒருத்தியாக ஏவியும் (Evie), ஜமாய்க்கா நாட்டிற்கு சென்று வேறு கலாசாரத்தையுடைய மற்றோரு தலைமுறையினருக்கு தேவனுடைய அன்பைக் காண்பிக்கவும், சாட்சி பகிரவும், பாடவும் பயணித்தாள். ஏவிக்கு அப்பயணத்தின் ஒரு நாள் மிகவும் மறக்கமுடியாததாகவும், சந்தோஷம் நிறைந்ததாகவும் அமைந்தது.

அன்று அப்பாடகர் குழுவினர் ஒரு தனியார் மருத்துவ விடுதிக்கு சென்று பாடவும்,  அங்குள்ளவர்களை சந்திக்கவும் சென்றனர். அவர்கள் பாடி முடித்த பின்பு ஏவி, அவ்விடுதியில் தங்கியிருந்த 30 வயதுள்ள ஒரு பெண்ணின் அருகில் அமர்ந்தாள். அவர்கள் ஒருவரோடொருவர் பேச ஆரம்பித்தவுடன், இயேசுவைக் குறித்தும், அவர் நமக்காக செய்தவற்றைக் குறித்தும் பேச வேண்டும் என உணர்த்தப்பட்டாள். ஆகவே, இரட்சிப்பைக் குறித்து வேதத்தில் உள்ள வசனங்களை காண்பித்து விளக்கினாள். விரைவில் அப்பெண் இயேசுவை தன் இரட்சகராக நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்ள தீர்மானித்து அப்படியே செய்தாள்.

இயேசுவைக் குறித்து உரையாடும்படி ஏவி தீர்மானித்ததால், அன்று எங்கள் குழு, தேவ குடும்பத்திற்குள் ஒரு புதிய பிறப்பை கொண்டாடியது.

ஏவி செய்தது போலவே, விசுவாசிகளாகிய நாமும் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று மாற்கு 16:15 கூறுகிறது. தி மெஸ்ஸேஜ் (The Message) என்கிற வேதாகம மொழியாக்கம் அவ்வசனத்தை இவ்வாறாக கூறுகிறது. “எல்லா இடத்திற்கும் சென்று, தேவனுடைய நற்செய்தியை ஒவ்வொருவருக்கும் அறிவியுங்கள்.”

சுவிஷேத்தைக் கேட்டு நமது இரட்சகருக்கு “ஆம்” என்று கூறி ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொருவருடைய அதிசய அனுபவத்தை, ஒருநாளும் நாம் குறைவாய் மதிப்பீடு செய்யாதிருப்போமாக.