நானும் எனது மனைவி கரோலினும், பிப்ஸ் வெஸ்டஸ் போர்ன் (Phipps Festus Bourne) அவர்களை 1995 ஆம் ஆண்டு வெர்ஜினியாவின் மாப்ரி இல் (Mabry Hill, Virgina) என்னும் இடத்திலுள்ள அவருடைய கடையில் சந்தித்தோம். 2002 ஆம் ஆண்டில் மரித்த போர்ன் நாம் காணும் பொருட்களை கூடுமானமட்டும் அச்சு அசலாக செதுக்குவதில் தலைசிறந்த சிற்பி. “ஒரு வாத்தை செதுக்குவது மிக சுலபம். உங்கள் மனதில் ஒரு வாத்து எப்படி இருக்கும் என்பதை நன்றாக பதித்துக் கொள்ளுங்கள். பின்பு ஒரு மரக்கட்டையை பார்த்து, அதில் வாத்து மாதிரி இல்லாத அனைத்தையும் வெட்டி எடுத்து விடுங்கள்” என்று கூறினார்.

அவ்வண்ணமே தேவனும் கூட,  கடினமான மரக்கட்டைகளாய் இருக்கிற நம்மைக் காண்கிறார். ஆனால்,  அம்மரக்கட்டைக்குள்,  கணுக்குள்,  கிளைக்குள்,  மறைந்திருக்கும் கிறிஸ்துவின் சாயலை உடைய மகனாய், மகளாய் நம்மைக் கண்டு,  அச்சாயலுக்கு ஒவ்வாத அனைத்தையும் செதுக்கி நீக்கி விடுகிறார். செதுக்கி முடிக்கப்பெற்ற “வாத்துகளாகிய” நம்மை,  நாம் காணக்கூடுமானால்,  அதன் அழகில் மயங்கிவிடுவோம்.

ஆனால், முதலாவதாக, நாம் ஒரு மரத்துண்டுதான் என்பதை ஏற்றுக்கொண்டு, சிற்பியின் சித்தத்திற்கேற்ப அவர் நம்மை செதுக்கவும், உருவாக்கவும், மென்மையாக்கவும் இடங்கொடுக்க வேண்டும். அதாவது, நமது சூழ்நிலைகள் இனிமையாகவோ நேர்மாறாகவோ, எவ்வாறாக இருப்பினும், அவை நம்மை உருவாக்கும்படியாக தேவனுடைய கரத்திலுள்ள ஆயுதங்களாகக் காண வேண்டும். அழகற்ற மரத்துண்டிற்குள் அழகான சிருஷ்டிப்பாய் நம்மைக் கண்ட தேவன் ஒன்றன் பின் ஒன்றாக, பகுதி பகுதியாக நம்மை உருவாக்குகிறார்.

சில சமயம் இந்த செயல்முறை அற்புதமாக உள்ளது: சில சமயம் வலி நிறைந்ததாக உள்ளது. ஆனால் முடிவிலோ, தேவனுடைய எல்லாக் கருவிகளும் நம்மை “தம்முடைய குமாரனுடைய சாயலுக்கு” (ரோம. 8:29) ஒத்து விளங்க செய்யும்.

அப்படிபட்டதான ஒத்த சாயலை வாஞ்சிக்கிறீர்களா? அப்படியானால், பிரதான சிற்பியின் கரங்களில் உங்களை ஒப்புக்கொடுங்கள்.