என்னுடைய அறையிலுள்ள ஜன்னலிலிருந்து சிரோ டெல் போரிகோ அல்லது “ஆடுகளின் மலை” என்ற 1700 மீட்டர் உயரமுள்ள மலையைப் பார்க்கலாம். 1862ல் பிரஞ்சு படை மெக்ஸிக்கோ மீது படையெடுத்தது. எதிரிகள் ஒரிசாபா என்ற பரந்த வெளியில் முகாமிட்டிருந்தார்கள். மெக்ஸிக்கோ படை மலை உச்சியின் மேல் முகாமிட்டிருந்தது. ஆயினும் மெக்ஸிக்கோ தளபதி, மலை உச்சிக்கு வரக்கூடிய வழியை காவல் பண்ணுவதில் கவனம் இல்லாமல் இருந்துவிட்டார். மெக்ஸிக்கோ படையினர் உறங்கிக் கொண்டிருந்தபொழுது, பிரஞ்சு படை மேலே வந்து அவர்களைத் தாக்கி 2000 படை வீரர்களை கொன்று போட்டது.

இந்த நிகழ்ச்சி ஒலிவமலையையும், அதன் அடிவாரத்திலிருந்த கெத்சமனே தோட்டத்தில் உறங்கின ஒரு சீஷர் குழுவையும் எனக்கு ஞாபகமூட்டியது. “நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது” (மாற். 14:38) என்று இயேசு அவர்களை கடிந்து கொண்டார்.

கிறிஸ்தவ வாழ்க்கையில் உறங்கி விடுவது, அதாவது கவனக்குறைவாக இருப்பது மிகவும் எளிதாக உள்ளது. பாதுகாப்பற்ற நிலைமையில் நாம் இருக்கும்பொழுது சோதனைகள் நம்மைத் தாக்குகின்றன. நமது ஆவிக்கேற்ற வாழ்க்கையில், ஜெபித்தல், வேதத்தை தியானித்தல் போன்ற சில பகுதிகளில் நாம் கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டால், நாம் சோர்வடைந்து நம்மைக் காத்துக்கொள்வதில் தவறிவிடுகிறோம். இதனால் நமது எதிராளியான சாத்தானின் தாக்குதலுக்கு எளிதான இலக்கு ஆகிவிடுகிறோம் (1 பேது. 5:8).

எந்த நேரத்திலும் தாக்கப்படக்கூடும் என்று எப்பொழுதும் நாம் ஜாக்கிரதையாக விழிப்போடிருக்க, ஜெபிக்க வேண்டும். நாம் விழித்திருந்து நமக்காகவும், பிறருக்காகவும் ஜெபித்தால், பரிசுத்தாவியானவர் சோதனையை எதிர்க்க நமக்கு பெலன் தருவார்.