என்னுடைய சிநேகிதி எலைன் உடலுக்கு ஊறு உண்டாக்கும் வகையில் கீழே விழுந்து, அதிலிருந்து தேறிக்கொண்டு வரும் வேளையில், மருத்துவமனையிலிருந்த ஒரு பணியாள் அவளது மணிக்கட்டில் பளிச் என்ற மஞ்சள் நிறமுடைய பட்டையைக் கட்டினாள். அப்பட்டையில் விழக்கூடிய ஆபத்து என்று எழுதப்பட்டிருந்தது. இந்த நபரை கவனமாக கண்காணியுங்கள். அவளால் சரியாக நடக்க இயலாது. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல அவளுக்கு உதவிசெய்யுங்கள் என்பதுதான் அதில் எழுதப்பட்டிருந்த வார்த்தையின் அர்த்தமாகும்.

“கீழே விழுவதற்கான ஆபத்து” உள்ளது என்று 1 கொரிந்தியர் 10ம் அதிகாரம் விசுவாசிகளை எச்சரிக்கிறது. பவுல் அவரது முன்னோர்களைப் பார்த்து, மனிதர்கள் பாவத்தில் விழக்கூடிய தன்மையுடையவர்கள் என்பதை அறிந்தார். இஸ்ரவேல் மக்கள் முறுமுறுத்தார்கள், விக்கிரக ஆராதனைக்காரர்களாக இருந்தார்கள். மேலும் வேசித்தனமும் பண்ணினார்கள். தேவன் அவர்கள் மேல் பிரியமாக இருக்காமல், அவர்களது தவறான செய்கைகளுக்குத்தக்க பலனை அனுபவிக்க அனுமதித்தார். ஆயினும் பவுல் “இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின்முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது. இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்” (1 கொரி. 10:11–12).

ஒரு குறிப்பிட்ட பாவத்தை நாம் விட்டுவிட்டதாக எண்ணி நம்மைநாமே ஏமாற்றிக்கொள்வது எளிதான காரியம். நமது பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு, மனந்திரும்பி, தேவனுடைய வழிகளுக்கு நம்மை ஒப்புவிக்க போராடினாலும் கூட சோதனைகள் நம்மை எளிதாக தாக்கும். தேவன் மறுபடியும் அதே பாவத்தில் விழுவதிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள, ஒரு வழியை நமக்கு காண்பிப்பதின் மூலம் அவர் நமக்கு உதவிசெய்கிறார். நாம் தப்பித்துக்கொள்ள தேவன் அருளும் வழியை ஏற்றுக்கொள்வதே நமது கடமையாகும்.