ஹார்வேர்டு தொழிற்பயிற்சி பள்ளியில் பேராசிரியராக இருந்த தாமஸ் T. டிலாங், அவருடைய மாணவர்கள், உடன் பணிசெய்பவர்கள் மத்தியில் கவலை அளிக்கக்கூடிய ஒரு மனப்பாங்கு நிலவுவதைக் கண்டார். அதாவது அவர்களுக்குள்ளாக ஒருவருக்கொருவர் ஒப்பிட்டுப்பார்க்கும் மனப்பான்மை இருந்தது. “தொழில் வல்லுநர்கள், புகழ்பெற்ற வணிக அமைப்பின் மேலாண்மை அதிகாரிகள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், மேலும் மற்ற கைதேர்ந்த தொழில் நிபுணர்கள் ஆகியோர் அவர்களுடைய சொந்த சாதனைகளை மற்றவர்களின் சாதனைகளோடு ஒப்பிட்டுப் பார்ப்பதில் அதிக கவனம் செலுத்தி வந்தார்கள்… இது தனிப்பட்ட நபருக்கும், அவர்கள் பணி செய்யும் நிறுவனங்களுக்கும் நல்லதல்ல. நீங்கள் பெறும் வெற்றியை, உள்ளான கோட்பாடுகளின் அடிப்படையில் இல்லாமல் வெளிப்படையான காரணங்களால் விளக்கினீர்களென்றால், நீங்கள் உங்கள் மனதிருப்தியையும், அர்ப்பணிப்பையும் குறைத்துக் கொள்கிறீர்கள். இப்படிப்பட்ட மனப்பான்மை முந்தைய காலங்களைவிட தற்பொழுது அதிகமாகக் காணப்படுகிறது” என்று அவர் எழுதியுள்ளார்.

இப்படியாக ஒருவரையொருவர் ஒப்பிட்டுப்பார்ப்பதில் முழுக்கவனம் செலுத்தும் தன்மை புதிதல்ல. நம்மை பிறரோடு ஒப்பிட்டுப் பார்ப்பதிலுள்ள ஆபத்துக்களைக் குறித்து வேதாகமம் நம்மை எச்சரிக்கிறது. அப்படிச் செய்யும்பொழுது, நாம் மிகவும் பெருமை அடைந்து மற்றவர்களை தாழ்வாகப் பார்க்கிறோம் (லூக். 18:9–14). அல்லது நாம் பொறாமைப்பட்டு அவர்களைப் போல மாற வேண்டுமென்று விரும்புகிறோம். அல்லது அவர்களிடம் உள்ள பொருட்கள் நமக்கும் வேண்டுமென்று விரும்புகிறோம் (யாக். 4:1). தேவன், நாம் செய்ய வேண்டுமென்று நமக்குக் கொடுத்த காரியங்களில் கவனம் செலுத்த தவறிவிடுகிறோம். இந்த விதமாக ஒத்துப்பார்க்கும் தன்மை, தேவன் அநீதியுள்ளவர் என்றும் நம்மைவிட மற்றவர்களுக்கு தாராள மனப்பான்மையுடன் செயல்படும் உரிமையில்லாதவரென்றும் நம்பும் நம்பிக்கையிலிருந்து வருகிறதென்று இயேசு விளக்கியுள்ளார் (மத். 20:1–16).

தேவனுடைய கிருபையினால் பிறரோடு ஒப்பிடுவதில் முழுக்கவனம் செலுத்தும் தன்மையிலிருந்து மீள்வதற்கு, நாம் தேவன் நமக்கு கொடுத்த வாழ்க்கையில் முழுக்கவனம் செலுத்துவதின் மூலம் கற்றுக்கொள்ளலாம். அனுதின ஆசீர்வாதங்களுக்காக தேவனுக்கு நன்றிகூற நாம் நேரத்தை செலவிடும்பொழுது, நாம் நமது எண்ணங்களை மாற்றி, நமது உள்ளான இருதயத்தில் தேவன் நல்லவர் என்பதை நம்ப ஆரம்பிக்கிறோம்.