2016ம் ஆண்டு ரியோ டி ஜெனரியோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுக்கச் செல்லும் விளையாட்டு வீரர்கள் அந்த ஊரில் எங்கு இருந்தாலும் இயேசுவைக் காணலாம். பிரேசில் நாட்டைச் சேர்ந்த இந்த ஊரில் 2310 அடி உயரமுள்ள கார்க்வோடா என்ற மலையின் உச்சியில், 100 அடி உயரமுள்ள கிறிஸ்து எனும் மீட்பர் என்ற மிகப்பெரிய சிலை நிறுவப்பட்டுள்ளது. கைகள் இரண்டையும் விரித்தபடி நிற்கும் இந்த பெரிய இயேசுவின் சிலை விரிந்து பரவிக்கிடக்கும் அந்த ஊரின் எந்தப் பகுதியிலிருந்தும், இரவும் பகலும் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.

கான்கிரீட்டாலும், சோப்புக்கல்லாலும் உருவாக்கப்பட்டுள்ள இந்த இயேசுவின் சிலையை பார்க்கும் அனைவரும் ஆறுதல் அடைவதுபோல, உண்மையான இயேசு நம்மைப் பார்க்கிறார் என்பது நமக்கு மிகுந்த ஆறுதலை அளிக்கிறது. சங்கீதம் 34ல் தாவீது “கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது” (சங்கீதம் 34:15) என்று இதை விளக்கியுள்ளார். “நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கி விடுகிறார். நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்” (சங். 34:17–18) என்று சங்கீதக்காரன் குறிப்பிட்டுள்ளார்.

யார் நீதிமான்கள்? நம்முடைய நீதியாகிய இயேசுகிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைப்பவர்களே நீதிமான்கள் (1 கொரி. 1:30). நமது தேவன் நமது வாழ்க்கையை பொறுப்பெடுத்துக் கொள்கிறார். அவரை விசுவாசித்து, அவரை நோக்கிக் கூப்பிடுகிறவர்களின் சத்தத்தைக் கேட்கிறார். நமக்கு உதவி தேவையான, நெருக்கடியான நேரங்களில் நமக்கு உதவி செய்ய நமது அருகில் இருக்கிறார். இயேசுவின் கண்கள் எப்பொழுதும் உங்கள்மேல் இருக்கின்றன.