கிரிக்கெட் விளையாட்டில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி என்பது ஓர் தண்டனையை அனுபவிப்பது போன்ற கடுமையானதொன்றாகும். போட்டியாளர்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை மதிய உணவு இடைவெளி, மாலை சிற்றுண்டி இடைவெளி தவிர மற்ற சமயங்களிளெல்லாம் விளையாடிக் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஐந்து நாட்கள் கூட போட்டி நடைபெறும். இது சகிப்புத்தன்மைக்கும், திறமைக்குமான ஓர் சோதனையாகும்.

இதே காரணங்களுக்காக நம்முடைய வாழ்க்கையிலும் சில சமயங்களில் கடுமையான சோதனைகளை நாம் கடந்துவர நேரிடுகிறது. சோதனைகள் முடிவில்லாமல் தொடர்வதாகவும் உணர்கிறோம். நீண்ட காலமாக வேலை கிடைக்க தொடர் வேட்டை, நீண்டகால தனிமை அல்லது நீண்டகாலமாக புற்றுநோய் பாதிப்பால் பலவித கஷ்டங்களை அனுபவித்து ‘இதற்கு ஓர் முடிவு வராதா’ என்ற போராட்டம்.

“ஆண்டவரே, எதுவரைக்கும் இதைப் பார்த்துக் கொண்டிருப்பீர்? என் ஆத்துமாவை அழிவுக்கும், எனக்கு அருமையானதைச் சிங்கக் குட்டிகளுக்கும் தப்புவியும்” (சங். 35:17) என்று அதனால் தான் சங்கீதக்காரன் கதறியிருக்கிறான். நீண்ட நாட்கள் தாவீது, சவுலால் தொடர்ந்து விரட்டப்பட்டு, சவுலின் ஆலோசகர்களால் அவதூறாகப் பேசப்பட்டு பழிக்கப்பட்டதால் இவ்வாறு தாவீது புலம்பி எழுதியிருக்கிறார் என்று வேத ஆராய்ச்சி நூல்கள் கூறுகின்றன. இந்த சோதனைப் போராட்டம் பல ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றது.

ஆனாலும் இறுதியில் “தமது ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிற கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக” என்று தாவீது பாடுகிறான் (வச.27). அவனுக்குண்டான சோதனைகள் தேவன் மீது மிக ஆழமான நம்பிக்கையை வைக்க வழிநடத்தியது. அதுபோல் சோதனைகள், கடினமான பாதைகள், இழப்புகள் போன்றவற்றை நீண்ட காலமாக அனுபவிக்கும் நாமும் நமது நம்பிக்கையை தேவன் மீது வைக்கலாம்.